பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

இருபது கிரவுண்ட் நிலத்தை, ராட்சதப் பல்லியோ அல்லது முதலையோ கால் பதித்து அப்பிக் கொண்டிருப்பது போன்ற கட்டுமானம். அந்த நிலத்தைச் சுற்றிப் போட்டிருந்த முள்வேலியும், அதை மறைத்த இரும்புத் தகடுகளும், அந்த ராட்சத மிருகத்தின் திறந்த வெளிச் சிறைச்சாலை போலத் தோன்றியது.

கிரஷ்ஷர் யந்திரத்தின் அண்டாப்பகுதி, பூமி சுற்றுவது போல சுற்றிக்கொண்டிருந்தது. பெட்டிகளில் ஜல்லிக் கற்கள், மணல், சிமெண்ட் கலந்த கலவையை, சில தொழிலாளிப் பெண்கள் தூக்கிக்கொண்டு இருந்தார்கள். அந்த யந்திரம் வாயைத் திறக்கும்போது, அதனை இவற்றால் இட்டு நிரப்பவேண்டும். இன்னொரு பக்கம், கண் கொண்ட ஜல்லடையில், இரண்டு மூன்று பெண்கள், பாண்டுவில் சுமந்துவந்த மணலைக் கொட்ட, கீழே தெளிந்து விழுந்த மண்ணை, இன்னொரு பெண் வாரிக் கொண்டிருந்தாள். சல்லடையில் தங்கிய சரல்களை, மற்றும் இன்னொருத்தி, வெளியே கொட்டிக் கொண்டிருந்தாள்.

கட்டுமான வேலைகளின் எல்லா அம்சங்களும், அங்கே இயங்கிக் கொண்டிருந்தன. மார்ச் மாத இறுதிக்குள் பில் முடியவேண்டும் என்பதற்காக பில்டிங்கை முடிப்பது என்று முடிவாகி விட்டது. செவ்வக வடிவில், நான்கு முறுக்கேறிய இரும்புக் கம்பிகள் வீதம் பல காலம்கள் அடுக்கடுக்காக நின்றன. அவற்றைப் பார்க்கும்போது முறுக்கேறிய தொழிலாளிகள், நான்கு நான்கு பேராய்ச் சேர்ந்து நிற்பது போலத் தோன்றியது. இன்னொரு பக்கம் கான்க்ரீட்டால் நிரப்பப்பட்ட காலம்கள் மூன்றடி நீளமுள்ள இரும்புக் கம்பிகளைத் துருத்திக் காட்டின. நாலடுக்கு வரிசையில் மூன்று மூன்று காலம்களாக நிறுத்தப்பட்ட காலம்களில், சிலவற்றில் செவ்வக வடிவக் கம்பிகள் செலுத்தப்பட்டாகி விட்டன; கான்க்ரீட்தான் போட வேண்டும். இந்தக் கட்டுமானத்திற்குக் கீழேயும் மேலேயும் பல கம்பிகள் நடப்பட்டு, அந்தக் கட்டுமானமே ஆயிரங்கால் மண்டபம் போல் ஆனது. ஒரு இடத்தில் வாண வேலையும் நடந்து கொண்டிருந்தது. இந்த வகை தொழிலாளர்களில் அடிமட்டமான ஒட்டர்களும் சில சித்தாள் பெண்களும், மண்வெட்டியாலும், கடப்பாரையாலும், தரையைக் கொத்திக்கொத்தி நான்கடிக்கும் கீழே போய்விட்டார்கள். அவர்கள் தலைகள்தான் தெரிந்தன.