பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 111

நினைத்து, ஆண்மைக் குறைவானவர்களுக்கு இயல்பாகவே ஏற்படும் ஆத்திரப் போதையில் நின்றான். ஐந்து நிமிடத்தில் தாயம்மாவும், அன்னவடிவும் திரும்பி வந்தார்கள். அவன் அதட்டினான்.

"அரைமணி நேரமாய் என்ன பண்ணினே." தாயம்மா, தவிப்போடு சொன்னாள்: "பெத்த பிள்ள கிட்ட சொல்றது மாதிரி பினாத்துறேன் நாய்னா. ஆயாவுக்கு சரியா மூத்திரம் கழியமாட்டக்கு. பிட்டத்துல நோவெடுக்கு. ஒரே எரிச்சல். அதனால்தான்."

"அப்படின்னா, ஆஸ்பத்திரிக்குப் போகணும். இங்கே ஏன் வாரே? செத்துத் தொலைச்சால் யார் பொறுப்பு?"

ஏதோ சூடாகக் கேட்கப்போன அன்னவடிவின் வலது கையை தாயம்மா அவனுக்குத் தெரியாமலே பட்டும்படாமல் கிள்ளிவிட்டு "பொறுத்துக்கோ நாய்னா" என்றாள்.

'இனிமேல்... இப்படிப் போனால்... வெளில போக வேண்டியதிருக்கும். ஜாக்கிரதை. அந்த அம்மாவ மரியாதையா நடந்துக்கச் சொல்லு."

தாயம்மாவிடம், புரோக்கர் வேலையை சூசகமாகச் சொல்லி விட்டால், அவள் அன்னவடிவை சரிப்படுத்தி விடுவாள் என்ற நம்பிக்கையோடும், அப்படி அவள் சரியாகும் வரை, தாயம்மாவை விரட்டுவதென்றும், அப்படி அவளை விரட்டும் சந்தர்ப்பங்களைக் கொடுக்கும் வகையில், அவளுக்கு, சிறுநீர் கோளாறு அடிக்கடி ஏற்பட வேண்டும் என்றும் நினைத்தபடி சூப்பர்வைசர் போனான். அவன் போன கால்மணி நேரத்தில், தாயம்மாவால், தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒதுக்குப்புறமாகப் போய்விட்டாள்.

பத்து நிமிடமாயும், அவள் திரும்பாததைப் பார்த்து விட்டு, சூப்பர்வைசர் மிக்க மகிழ்ச்சியோடு போனான். அன்னவடிவு, அவன் அங்கே இல்லாததுபோல் இயங்கினாள். அதுவே அவனை ஆவேசனாக்கியது.

"அந்தம்மா பழையபடியும் போயிட்டாளா?" அன்னவடிவு பதில் பேசவில்லை. தாயம்மா, புடவையை நனைத்தபடி ஓடிவந்தாள். "மன்னிச்சிடு மவராசா. தீட்டு நின்னுட்டுன்னு சந்தோஷப்பட்ட வயசில இந்தக் கருமாந்திரம்."