பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 117

அடையாளம். அருகிலேயே கக்கூஸ் அங்கே கார்ப்பரேஷன் குழாய்நீர் வெட்கப்பட்டு நுழைய மறுத்ததுபோல் மறைந்திருந்து துர்வாசனையை, வெளியே ஒவ்வொருவருடைய மூக்கிலும் நுழைந்து கொண்டிருந்தது. மொத்தம் முன்னுறு குடிசைகள் உள்ள அந்தப் பகுதியில் மின்சார விளக்கே கிடையாது. இரண்டே இரண்டு தண்ணீர்க் குழாய்கள். அவற்றில் நீர் பிடிக்க பெண்கள் படும்பாடு தண்ணீர் படாதபாடு. ஒட்டுச் சாவடியில் கூடுவது போன்ற கூட்டம். ஆனால் அவர்களை ஏற்றிப்போக கார்கள்தான் இல்லை.

பெரும்பாலும் கட்டிட வேலைகளுக்குச் செல்லும் அந்தப் பெண்கள் மாலையில் வந்ததும் முதல் வேலையாக மளிகைக் கடைக்குப் போய் அரிசி வாங்குவார்கள். பிறகு லாந்தர் விளக்கை ஏற்ற மண்ணெண்ணெய் வாங்க வேண்டும். சமைப்பதற்குரிய சாமான்கள் ஏழுமனி முதல் ரெடியாகிவிடும். ஆனால் தெரு அடங்குவதற்குக் காத்திருந்து சமைப்பதற்கு ஒன்பது மணிக்கு மேலாகிவிடலாம். அடிவயிற்றில் நெருப்பைப் பிடித்துக்கொண்டே அவர்கள் குழாய் நீரைப் பிடிக்க வேண்டும். காலையில் அதிகாலையிலேயே எழுந்து வெளியே ஒதுங்க வேண்டும். கண்படும் காலை வந்து விட்டால் அவர்களால் காலைக்கடனைக் கழிக்க முடியாது. இருப்பது ஒரே ஒரு கக்கூஸ். அதுவும் துளி நீரில்லாதது. ஆண்களைப் போல் வெளியேயும் போகமுடியாது. உணவின் எச்சங்களை அடக்கி, அடக்கி, அவற்றை நோயாகவும், நொடியாகவும் கொண்ட பெண்கள் அத்தனை பேரும் குடங்களை வரிசையாக வைத்துக் கொண்டு காத்திருந்தார்கள் வேலைக்குத்தான் காத்திருக்கலாம். வேலையின் கூலியை உணவாக்கிவிடும் சமயத்திலயுமா?

அன்னவடிவு, ஒருத்தியை தன் பானையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, தாயம்மாவைக் கவனிக்க, குடிசையைப் பார்த்துப் போனாள். தாயம்மா தூங்கிக் கொண்டிருப்பதுபோல் தெரிந்தது. குழாய்க்குத் திரும்பி வந்த அன்னவடிவைப் பார்த்து ஒருத்தி பேசினாள்:

"ஒங்க நாட்டுப்புறம் மாதுரி வராதுல்லே? பாத்தியாமா எங்க நெலமய தண்ணிக்காக எம்மா நேரம் காத்திருக்கோம். இது சண்டை வாரது சகஜம். இது புரியாம. சில பெரிய மனுஷங்க குழாய்ச் சண்டை மாதுரி ஆகப்படாதுன்னு பெண்டாட்டி பிள்ளீங்களுக்கு ரோசன சொல்றாங்க. இவங்கள ஜோட்டால அடிக்கணும். பொறுக்கிப் பசங்க. அவங்க பொண்ணுங்க இப்படிக் காத்து நின்னாத் தெரியும். இதே ஏரியாவுல இருக்கிற பங்களாங்கள்ல பாத்ரூம்ல ரண்டு குழாய், கக்கூஸ்ல ரண்டு, சமையல் அறையில ரண்டு, பூந்தோட்டத்திலே ரண்டுன்னு எத்தனையோ குழாய்ங்க. ஆனால் ஆயிரம் பேர் இருக்கிற இங்க ரண்டு