பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 121

பெண்டாட்டியக் கூட திருப்திப்படுத்த முடியாத பொட்டப்பயலுவ பேச்சை பெரிசா எடுத்துக்காதே. மிஞ்சிப் போனால் நம்ம கோவிந்தன் கீறான். கட்டையில போறவனுக்கு பிளேடுன்னா அல்வா சாப்பிட்டது போல" என்று ஆறுதல் சொல்லிவிட்டாள்.

ஆனால் அப்படி ஆறுதல் சொன்னவள், இப்போது ஆறுதல் வேண்டிக் கிடக்கிறாள். கையில் பணம் இல்லாமல் அரசாங்க ஆஸ்பத்திரிக்குப் போன தாயம்மாவை டாக்டர்கள் பல நாள் இழுத்தடித்தார்கள். எக்ஸ்ரே என்றார்களே தவிர, அது எடுத்து முடிந்த பாடில்லை. சிறுநீரைச் சோதிக்க வேண்டும் என்றார்களே தவிர, அந்தச் சோதனையின் முடிவு சொல்லப் படவே இல்லை. ஒரு நாள் வேதனை தாளாது துடித்த தாயம்மாவை பெயின்டர் பெருமாளும் வேலுவும் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அங்கே கிழிந்த பாயில் அந்த கிழிந்துபோன மூதாட்டி தரையோடு தரையாகக் கிடக்கிறாள். அன்னம்மா அவளுக்குக் கஞ்சி கொண்டு போகிறாள்.

தாயம்மாவின் மகன் கோவிந்தன் அம்மாவுக்கு ஏற்பட்ட துக்கத்தை மறக்க அதிகமாய் குடிக்கிறான். அவ்வளவு ஏன்? வேலுவின் பீடிக்கு காசு கொடுக்காத அன்னவடிவே தன் முன்னால் வந்து தலைகவிழ்ந்து நிற்கும் இவனிடம் ஒரு 'கிளாஸ்க்கு பணம் கொடுத்திருக்கிறாள். ஒருநாள் மனம் பொறுக்காமல் தம்பி, நீ செய்யிறது நல்லா இல்லே. அம்மாவோட நிலைமையைப் பார்த்தியா? இப்போ அவங்க பிழைப்பாங்களா மாட்டாங்களா என்ற நிலைமைபோய் சீக்கிரமாய் அவஸ்தப்படாம போய்ச் சேரட்டுமுன்னு நினைக்கிற அளவுக்கு ஆயிட்டுப்பா" என்று சொல்லிக் காட்டியபோது, கோவிந்தன் அழுதுவிட்டான். இப்போது அப்பப்போ ஆஸ்பத்திரிக்குப் போகிறான். அதற்கான பஸ் சார்ஜை அன்னவடிவே தான் கொடுக்கிறாள். அவன் தனக்களிக்கும் மதிப்பாலும் அடைக்கலம் கொடுத்தவளை அம்போ என்று விடலாகாது என்ற நன்றிப் பெருக்காலும் அன்னவடிவு வேறு குடிசை பார்க்கவில்லை.

ஆறு மாத காலத்தில் அவள் கையில் நூறு ரூபாய் சேர்ந்தது. தனக்கு ஒரு நூல் புடவையும் வேலுவுக்கும் கோவிந்தனுக்கும் நாலு முழ வேட்டியும் வாங்கிய பிறகும். ஐம்பது ரூபாய் இருந்தது. ஆனால் நான்கு நாளாக விடாமல் பெய்த மழை, பத்துநாள் மண்வேலையில் மண்போட்டு விட்டது. மழை, ஒன்று தூறலாக வந்திருக்க வேண்டும் அல்லது பேய் மழையாகப் பிடித்திருக்க வேண்டும். ஆனால் அந்த மழை, அரசாங்கம் கவனத்தில் எடுத்துக் கொள்ள முடியாத அளவிற்கும், குடிசை மக்கள் கண்டுக்க வேண்டிய அளவிற்குமான சகுனி மழை.