பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 125

செய்யும் கொத்தனார்களுக்கு, சாரத்தில் ஏறி. கண்ணாம்புக் கலவை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பெரியாள்கள் கதவுகளைத் தூக்கி நிறுத்திக் கொண்டிருந்தார்கள். ஒருவர் நீர்குழாயை அரைவட்டமாகத் தூக்கிக் கொண்டு, ஒரு சுவரை நனைத்துக் கொண்டிருந்தார். அத்தனை மனிதர்களும் அந்தக் கட்டிடத்தின் ஜன்னல்கள் போல, கதவுகள் போல, ஆங்காங்கே நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள்தான் அங்கே வசிக்கிறார்கள் என்பது போன்ற பிரமை, சாரங்களில் நின்ற சித்தாள் பெண்கள், திருஷ்டிப் பரிகார பொம்மைகள் போல தோன்றியதையும் மறைப்பதற்கில்லை.

பெயிண்டர் பெருமாள், வெளிச்சுவருக்கு டிஸ்டம்பர் அடித்துக் கொண்டிருந்தார். அன்னவடிவு. மேல் தளத்திற்கு செங்கல் ஜல்லிகளை சாரத்திற்கு மேல் சாரம் ஏறி சுமந்து கொண்டிருந்தாள். தனக்குப் பிறக்கும் பிள்ளைக்கு என்ன பெயரிடலாம் என்று நினைத்துக் கொண்டே சுமந்து போனாள். பெண் என்றால் தாயம்மா. ஆண் என்றால் குலதெய்வம் சுடலைமாடனோட பெயர். சீ. சுடலைமாடன் என்னத்தக் கிழிச்சான்? ஊர்விட்டு ஊர் விரட்டுனதுதான் மிச்சம். பேசாம கோவிந்தன் பெயரை வெச்சிடலாம். அவன்தான் தாய்மாமன். அவருகிட்டே ராத்திரிக்குக் கேட்கணும். பொல்லாத மனுஷன். எனக்கு ரெட்டப் பிள்ளை பிறக்குமுன்னு சொல்லுறார். நான், இந்த வயித்தோட படுறபாடு அவருக்கு எப்படித் தெரியும். தெரியாமலா இருக்கும்? ஒரு முத்தம் கொடுக்க ஆசையோட வந்த மனுஷனுக்கு முத்தங்கொடுக்காத பாவி நான். கொடுத்துத்தான் இந்த கதி? இப்போ பிள்ளை எதுக்கு? பரவாயில்லை, என் பிள்ளை கொடுத்து வச்சது. பிறக்கும் முன்னாலேயே மூணு மாடி கட்டிடத்தில உச்சிக்கு வந்துட்டு. அப்பன மாதிரியே. துருதுருன்னு இருக்கும். இப்பவே வயித்தக் குடையது பாரு. இது அப்பனும் அப்படித்தான். பாவி மனுஷன், சொன்னால்தான் கேட்டாரா? நான்தான் சொல்லியிருக்கேனா?

அன்னவடிவு, பாண்டுக்கூடையுடன் இரண்டாவது மாடியில் நின்றபடி கணவனைத் திரும்பிப் பார்த்தாள். பிறகு வெட்கப்பட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு மூன்றாவது மாடிக்குப் போய்க் கொண்டிருந்தாள்.

வேலு, மேஸ்திரியின் பொறுப்பில் வந்தாலும் அன்று கான்டிராக்டரின் மஸ்டர் ரோலில் - அதாவது கம்பெனியின் ஆளாக வேலை பார்த்தான். அரசாங்கக் கட்டிடம் என்பதால் அரசே, காண்டிராக்டர் நாயகத்திற்கு ஆயிரக் கணக்கான சிமெண்ட் மூட்டைகளையும் டன் கணக்காக எஃகையும் கொடுத்திருந்தது. நாயகத்திற்கு நாயாக அலைய வேண்டிய வேலை மிச்சம். மிச்சம்