பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 127

தலையில் இன்னொரு மூட்டையை ஏத்துங்கடா. நல்ல பையன் மாதிரி தோணுது, நல்லா வேலை பார்த்தால் நல்லா முன்னுக்கு வரலாம். சீக்கிரமாய் ஏத்துங்கடா."

வேலு மறுக்கப் போனான். இன்னொரு மூட்டையை சுமப்பது அவனுக்கும் பெரிய காரியமல்ல. ஆனால் தன்னைக் காரணமாகக் காட்டி இதர தொழிலாளர்களை அவர் வற்புறுத்தக் கூடாதே என்ற எண்ணம். இதற்குள் நான்கு பேர் அவன் தலையில் மூட்டையை சுமைதாங்கிக் கல்லில் வைப்பது போல் வைத்துவிட்டார்கள். காண்டிராக்டர் சொன்னதற்காக அந்த ஒரு தடவையும் லாரிக்குப் போய்விட்டு, என்னால ரெண்டு மூட்டைய சுமக்க முடியலிங்க என்று சொல்லிவிடுவது என்று தீர்மானித்தான். சிறிது நேரத்திற்கு முன்புவரை மஸ்டர்ரோல் மூலம் முன்னேற நினைத்தவன் இப்போது, முன்னேற்றம் என்பது ஒட்டு மொத்தமாக எல்லோருக்கும் வந்தால்தான் முன்னேற்றம் என்றும் நினைத்துக் கொண்டான்.

கான்டிராக்டர், அவனை அங்கீகாரத்தோடு பார்த்தார். அவரைப் பார்த்ததும் பார்க்காதவன் போல் அவன் நடந்தான். கிராமத்தில் கூடையை தலையில் வைத்து மண்வெட்டியை தோளில் போட்டு அதற்குமேல் வட்டை வைத்து அதற்குமேல் புல்லுக்கட்டையும் வைத்து அனாவசியமாக நடப்பவனுக்கு அந்தச் சுமை சிறிது அழுத்தியது கண்டு ஆச்சரியப்பட்டான். பிறகு விறுவிறுப்பாய் நடந்தான்.

திடீரென்று, ஒரே ஒரு நிமிடத்தில் புதைமண் போலிருந்த சகதிப் பாதையில் நடந்தவன் திடீரென்று மண்டியிட்ட நிலையில் அப்படியே நின்றான். ஒரு மூட்டை கழுத்தில் சரிந்து அவன் முகத்தைத் திருப்பியது. இன்னொரு மூட்டை பிடரியில் விழுந்து திருப்பிய முகம் திரும்ப முடியாதபடி அழுத்திக் கொண்டிருந்தது. அவன் கைகளையும் கால்களையும் உதறுவது போலிருந்தது. வாயில் வெள்ளை வெள்ளையாக நுரை வந்து கொண்டிருந்தது. கம்பீரமான யானை அங்குசக் குத்தலால் அதிர்ந்து மண்டியிட்டது போன்ற நிலை முதலையின் வாயில் தன்னை விடுவிக்க முடியாமல் மதயானை ஒன்று தவிப்பது போன்ற தவிப்பு. மனைவியை பாசத்தோடு பார்க்க விரும்புகிறவன் போல் முகத்தைத் திருப்பப்போனான். முடியவில்லை. மரணத்தின் முன்னால் மண்டியிட விரும்பாதவன் போல் முடங்கிய காலை எடுக்கப் போனான். இயலவில்லை.

எல்லோரும், அங்கே வந்தார்கள். சித்தாள்களும் பெரியாட்களும் தாவி வந்தார்கள். மேஸ்திரிகள் ஓடி வந்தார்கள். காண்டிராக்டர் நாயகமும் சூப்பர்வைசர்களும் வேகமாக நடந்து வந்தார்கள்.