பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 129

பெயின்டர் பெருமாளும் உட்காந்திருந்தார்கள். முன்னிருக்கையில், இன்னொரு பெரியாளும், நாயகத்தின் வலது கையான சுந்தரமும் அமர்ந்திருந்தார்கள். சுந்தரத்தைத் தனியாகக் கூப்பிட்டு நாயகம் ஏதோ சொன்னார். அவன் தலையாட்டினான். சீக்கிரம், ஒவ்வொரு நிமிஷமும் முக்கியம் என்று அதட்டினார் பெருமாள்.

டாக்ஸி புறப்படப் போனபோது, சுற்றி நின்ற வேலைப் பட்டாளத்தைப் பார்த்து உம் போய் ஒங்க வேலயப் பாருங்க என்றார் நாயகம்.

டாக்ஸி சென்னை மாநகரின் பல சாலைகளைக் கடந்து குறுக்காக நெடுக்காக விரைந்து கொண்டிருந்தது. வேலு, அன்னவடிவின் மடியில் ஆகாயக் கப்பல் போல் மிதந்து கொண்டிருந்தான். அவள், அவன் முகத்தைப் பார்ப்பதும் தன் முகத்தைத் துடைப்பதுமாய் இருந்தாள். ஆஸ்பத்திரியின் நுழைவாயிலுக்குள், டாக்சி போனபோது திடீரென்று வேலுவின் கால்கள் வெட்டின. கைகள் உதறின. மூச்சு விடமுடியாமல் வாயைப் பிளந்தான். அன்னவடிவு என்ராசா என்று சொல்லி அவனைப் பார்த்துக் குனிந்தபோது, அவள் கண்ணில் நின்ற நீர் அவன் வாயில் விழுந்தது.

கண்ணிரே பாலானது போல் அவன் பார்த்தான். பார்த்துக் கொண்டே விறைத்துப் போனான். அன்னவடிவு அழுகையின் உந்துதலால் வாயைத் திறந்தாள். ஒலி வரவில்லை. அப்படியே அவன் மீது சாய்ந்தாள். டாக்ஸி நின்றது. சித்தாள் பெண், அவளைத் தூக்கி அணைத்து, தன் மடியில் சாய்த்த போது, பெயிண்டர் ஒரு சோடா வாங்கிக் கொண்டு வந்து அதை அவள் முகத்தில் தெளித்தார். அவள் மலங்க மலங்க விழித்தபடி கணவனைப் பார்த்தாள். பிறகு காதோடு சேர்த்து தன் தலையைப் பிடித்துக் கொண்டாள்.

எமர்ஜென்சி வார்டுக்கு வேலு எடுத்துக் கொண்டு போகப்பட்டான். அவன் செத்துப் போனதை டாக்டர்கள் ஊர்ஜிதப் படுத்தினார்கள். பிறகு, "இது வேல செய்யும்போது ஏற்பட்ட மரணம். போலீஸ்ல போய் ஒரு சர்டிபிகேட் வாங்கிட்டு வாங்க, பரிசோதனை பண்ணலாம்" என்றார்கள். அந்த டாக்ஸி, பிணத்துடனும், பிணம்போல் இருந்த அன்னவடிவோடும். போலீஸ் நிலையத்தைப் பார்த்து ஓடியது. வழியில், சுந்தரம் இறங்கிக்கொண்டான். முப்பது வயதில் ஐம்பதைத் தாண்டியவன் போல் பேசினான். நீங்க போலீஸ் ஸ்டேஷனுக்குப் போங்க. நான் இதோ பின்னாலேயே ஒரு ஆட்டோவுல வந்துடுறேன்" என்று சொல்லிவிட்டு, பதிலுக்குக் காத்திராமல், ஒரு டெலிபோன் கூண்டைப் பார்த்துப் போனான். போலீஸ் நிலையத்திற்குள் டாக்ஸி நின்றதும், அன்னவடிவை, சித்தாள் பெண் கைத்தாங்கலாகப் பிடித்தபடி உள்ளே கூட்டிக் கொண்டு போனாள். 'இந்தம்மாதான் அன்னவடிவா?’ என்று சொன்ன கான்ஸ்டேபிளைப் பார்த்து, இன்ஸ்பெக்டர் கண்களால் எரித்தார்.