பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 133

இப்படியாவது வேல நடக்கறதப் பார்த்து. கவலய மறக்கத்தான் அப்படி ஏற்பாடு செய்திருக்கீங்கன்னு நினைக்கேன்."

திடீரென்று, போலீஸ் வேன் உள்ளே வந்தது. ஏழெட்டு ஜவான்கள் லத்திக் கம்போடு, உள்ளே வந்தார்கள். என்னமோ ஏதோவென்று வந்தவர்கள், சுமூகமான நிலையைப் பார்த்துவிட்டு, தங்கள் முகத்தை சுருக்கிக் கொண்டார்கள். விநாயகத்தின் முகம் இப்போது இறுகியது. சுந்தரம், ஏதும் தெரியாதவன் போல், சர்வர் கொண்டு வந்த காபி டம்ளர்களை நீட்டினான். அந்தப் பெண் அமைதியாகப் பேசினாள்.

"நாங்க. வன்முறைக் கூட்டமில்லை. இந்த சமூக அமைப்பை உதைக்காமல், உங்களை உதைக்கிறதுல அர்த்தமில்ல என்கிறத தெரிஞ்சவங்க, போலீஸ் கூப்பிட்டிருக்க வேண்டாம். அவங்க வந்ததுனால தப்புமில்ல. ஒங்ககிட்ட இருந்து எங்களுக்கும் பாதுகாப்பு வேண்டாமா?

விநாயகம் அதட்டலாகக் கேட்டார். "இப்போ என்ன வேணும்?"

"அதுகூட சொல்லித்தான் தெரியணுமா? இறந்தவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு தரணும். பிளேன்ல இறங்கிறவனுக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு. ஆனால் பிளேன் மாதிரி அந்தரத்தில் நின்று வேலை பார்த்து, கீழே விழுந்தவனுக்கு எதுவுமில்லன்னா. அது அனர்த்தம். இதுக்கு அர்த்தம் கண்டுபிடிக்கத்தான் வந்திருக்கோம்."

"முதல்ல. நீங்க ஒண்ணு தெரிஞ்சுக்கணும். வேலு என்னுடைய எம்பிளாயி இல்ல."

பெயிண்டர் பெருமாள் இடைமறித்தார். “மஸ்டர்ரோல்ல. அவரோட பேரு இருந்துதே? பெயிண்ட் எடுக்க வந்தப்போ நானே பார்த்தேன்."

"நீங்க ஆயிரம் பார்ப்பீங்க. அதுக்கு நான் பொறுப்பில்ல. இந்தாப்பா சுந்தரம், மஸ்டர்ரோல எடு, உம் இந்தாங்க, நீங்களே பாருங்க" மஸ்டர்ரோலில், வேலுவின் பெயரைக் காணவில்லை. அந்தப் பெயரை அடித்து எழுதிய அடையாளம் கூட இல்லை. பெருமாள் கோபத்தில் துடித்தார். அந்தப் பெண் சற்று காரமாகப் பேசினாள்.

"ஓங்களால. எது வேணுமின்னாலும் செய்ய முடியுமுன்னு எங்களுக்குத் தெரியும். எல்லாக் கட்சிக்கும் நீங்க நன்கொடை கொடுக்கிறவங்கன்னும் ஊர் உலகத்துக்கே தெரியும். எங்களுக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. அந்தக் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு தரணும் அவ்வளவுதான்."