பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 ஒருநாள் போதுமா?

"நம்ம தொகுதி எம்.எல்.ஏ.யையும் கட்சித் தலைவர்களையும் பார்த்து நியாயம் கேட்கலாம்."

எல்லோரும் அவர் சொன்னதை ஒப்புக் கொண்டு முதலில் எம்.எல்.ஏயைப் பார்த்தார்கள். அவர் அன்னவடிவைப் பார்த்ததும் அழுதுவிட்டார். கண்களைக் கூடத் துடைத்துக் கொண்டார். பிறகு "அடடே நாயகமா? நல்ல மனுஷனாச்சே, நான் சொல்லி நஷ்ட ஈடு வாங்கித் தாறேன்" என்று சொல்லிக் கொண்டே நாயகத்தை அப்போதே பார்க்கப் போகிறவர்போல் காரில் ஏறினார். கார் நாயகம் வீட்டுக்கு எதிர்திசையில் போனது.

நிர்வாகிகள் சளைக்கவில்லை. ஒருசில தலைவர்களைப் பார்த்தார்கள். ஒரு சிலர் தனி மனித விவகாரம், தலையிட முடியாது என்றார்கள். இன்னும் சிலர் தட்டிக் கழித்தார்கள். ஒருவர் நாயகத்துக்கே வக்காலத்து வாங்கிப் பேசினார். நாயகம் கொடுத்த நன்கொடைகளின் கனபரிமாணத்திற்கு ஏற்ப, அவர்களின் சுருதியில் ஏற்ற இறக்கம் இருந்தாலும், அந்த சுருதி போட்ட அனுபல்லவி நாயகத்திற்கு உதவுவது மாதிரியே இருந்தது. கட்சிக்காரன் என்று ஒருவர் நழுவ, சக காண்டிராக்டர் என்று இன்னொருவர் நழுவ, ஜாதிக்காரன் என்று மற்றொருவர் நழுவ, நள்ளிரவு நழுவியது தான் மிச்சம். அவர்களைப் பார்த்து தெருநாய்கள் குலைத்ததுதான் சொச்சம் என்ன விபரம் என்று பொறுமையாய்க் கேட்க மனமில்லாதவர்களாய், ஏதோ தலைபோகிற அவசரத்தில் துடிப்பவர்கள் போல், அவசர அவசமாகக் கேட்கும் தலைவர்களிடம் எதைச் சொல்வது? வாய்தான் வலிக்கும், கால்தான் நோகும்.

வாய் வலித்து, கால் நோவெடுக்க, தொழிலாளர்கள் அன்னவடிவை, அவள் குடிசையில் கொண்டு வந்து விட்டார்கள். "கவலைப்படாதீங்கம்மா. நீங்க அனாதையில்ல. நாங்க இருக்கிறோம்" என்று எல்லோருக்கும் சேர்ந்துச் சொல்வது போல், அந்தப் பெண் சொன்னாள்.

அன்னவடிவு, அவர்களையே பார்த்தாள். கட்டிடத் தொழிலாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள அவளுக்குப் பரிச்சயமான அத்தனை பேரும் இருந்தார்கள். ஆனால் வேலுவைத்தான் காணவில்லை.

அன்னவடிவு. அந்தக் கூட்டத்தில், அவனைத் தேடுவது போல் உற்றுப் பார்த்தாள். ஓயாது பார்த்தாள். பிறகு யதார்த்தத்தை உணராமல், தேடிய கண்களைத் தண்டிப்பவள் போல் அவற்றை மூடிக்கொண்டாள்.