பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 141

அன்னவடிவு எதுவும் சொல்லவில்லை. அவள் அருகே நின்ற ஒரு பெண்ணை தன்னருகே வரச் சொன்னாள். அவள் காதில் எதையோ சொல்லிவிட்டு, தலையை தரையில் சட்டென்று போட்டுவிட்டு, அவருக்கு முதுகைக் காட்டியபடி, சுவரோடு முகம் உரச திரும்பிப் படுத்துக் கொண்டாள். அந்தப் பெண் அவரைப் பார்த்துக் கத்தினாள்.

"யோவ்! நீயும் ஒன் முகரக்கட்டயும், பேரமா பேசவந்தே? ஒன்னை மரியாதியா இடத்தக் காலி பண்ணும்படி அன்னவடிவு சொல்லச் சொன்னாள். இன்னுமா உட்கார்ந்திருக்கே?"

ஆனானப்பட்ட உள்ளுர் மாமா, திடுக்கிட்டு எழுந்தார். அந்தப் பெண்ணையே பார்த்துவிட்டு, பின்னர் வேகமாக வெளியேறினார்.

அரைமணி நேரத்திற்குப் பிறகு, சத்தம் கேட்டு, அன்னவடிவு திரும்பிப் பார்த்தாள்.

கோவிந்தன், செந்தழல் கண்களோடு, சிந்தும் மூக்கோடு, அவளையே பார்த்தபடி நின்றிருந்தான். அன்னவடிவு மெல்லக் கேட்டாள்

"ஆஸ்பத்திரிக்குப் போனியா? அம்மாவுக்கு எப்படி இருக்கு? விஷயத்த சொன்னியா?"

கோவிந்தன் சலிப்போடு சொன்னான்: "போனேன். அம்மா சொல்றத வாங்குற நிலையில் இல்ல. இப்போ, தம்பி, அக்காவுக்கு ஆறுதல் சொல்றான். இன்னும் இரண்டு நாளையில, அக்கா. தம்பிக்கு ஆறுதல் சொல்றது வரும்."

அன்னவடிவு, கண்களை அகல விரித்தாள். கோவிந்தன் படபட வென்று பேசினான்:

"ரெண்டு நாளைக்கு மேல தாங்காது. வீட்டுக்கு தூக்கிக்கினு போன்னு ஆஸ்பத்திரில சொன்னாங்க. நானுதான் எங்க குடிசையில ரெண்டு பிணத்தை வைக்க இடமில்லன்னு சொல்லிவிட்டு வந்துட்டேன்." கோவிந்தன், அவளின் துக்கத்தைப் பகிர வேண்டிய சமயத்தில் தன் துக்கத்தை சுமத்தக்கூடாது என்று நினைத்தவன் போல் தன்னைக் கட்டுப்படுத்த முடியாதவனாய் வெளியே ஓடினான். அன்னவடிவு குப்புறப் படுத்தாள். இரண்டு கண்களில் ஒன்று இறந்தவனுக்காகவும், இன்னொன்று எப்போது எந்தச் சமயத்திலும் இறக்கப் போகிறவளுக்காகவும் குடமெடுத்தன. நெஞ்சு கொள்ளி போல் எரிந்தது. உடம்பு அஸ்திபோல் குழைந்தது.