பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 143

சொல்லிடுறேன். கோர்ட்டு. வழக்குன்னு முடிவெடுத்தா நீ மாசம் ஒருதடவ, அப்புறம் வாரம் ஒரு தடவன்னு அலைய வேண்டியிருக்கும். ஏழைங்களுக்கு தீர்ப்பவிட வாய்தாக்கள்தான் எதிரிங்க, இப்படிப்பட்ட சிரமத்த சகிச்சாகணும். உனக்கு நஷ்டஈடு கிடைத்தாலும் உண்டு. கிடைக்காவிட்டாலும் உண்டு. அதே சமயத்தில் ஒன்னை நாங்க அனாதையா விடமாட்டோம். என்ன சொல்றே?"

அன்னவடிவு விம்மினாள். பெயிண்டர் பதைபதைத்து அவள் அருகே போனார். "என்னம்மா, என்ன சொல்லிட்டேன்? ஏன் அழுகிறே?" என்றார்.

அன்னவடிவு, விம்மலுக்கிடையே கேவிக் கேவி சொன்னாள்: "என்னை பணத்துக்கு ஆசைப்படுபவள்னு நினைச்சிட்டியரே அண்ணாச்சி ஒங்க சொல்லுக்கு உசத்தியா எது இருக்க முடியும்? எங்க ஊர்க்காரன் ரூபாய் ஆசையைக் காட்டினான். அவனைத் துரத்தினது தெரிஞ்சும் உங்க வாயில இருந்து இந்த மாதிரி வார்த்த வரலாமா? என்னை சுயநலக்காரியா நினைக்கலாமா? பிளாட்பாரத்துல நின்ன என்னை கருணையோடு பார்த்த உங்களை மறக்க முடியுமா? என்னக் காணாதவள் மாதிரி போன ஊர்க்காரனை நினைக்க முடியுமா? என் புருசனோட சாவில எனக்கு என்ன வரும் என்கிறது முக்கியமல்ல அண்ணாச்சி. நீங்க எந்த முடிவு எடுத்தாலும் அது எனக்காக மட்டும் இருக்கப்படாது. எல்லோருக்காகவும் இருக்கணும். அப்படி எல்லோருக்குமே ஒரு நன்மை ஏற்பட்டால் என் புருஷன் சாவிலயும் ஒரு அர்த்தம் இருக்குன்னு நினைப்பேன். அவுக செத்தது இப்பப் பெரிசில்ல; அவுகள மாதிரி நம்ம ஆளு இனிமேலும் சாகாம இருக்கதுதான் பெரிசு. கோர்ட்டுக்குப் போறதுக்கு எதுலயாவது கையெழுத்துப் போடணுமா அண்ணாச்சி?"

பெயிண்டர் பெருமாளால் பேச முடியவில்லை. அவளை நோக்கிக் கையெழுத்துக் கும்பிட்டார். "நீ விதவையாக அல்ல. எங்களுக்குத் தாயாய் மாறிட்டே. வெந்தத தின்னு விதி வந்தா சாகுறதுன்னு மட்டுமே நினைக்கிற நம்ம வர்க்கத்துக்கு ஒரு மரியாதையை, ஒரு அந்தஸ்தை கொடுத்திட்ட தாயே"

பெயிண்டர் பெருமாளால் மேற்கொண்டு பேச முடியவில்லை. அவள் முன்னால் அழுது, அப்போதுதான் அழுது ஓய்ந்த அவளை மீண்டும் அழவைக்க விரும்பாமல் கண்ணிர்த் துளிகள் தரையில் தெறிக்கும்படி வெளியே ஓடினார்.