பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 ஒருநாள் போதுமா?

செல்லும் தேருக்குப் பின்னால் தொழிலாளர்களும், அவர்களின் தொழிலோடு சம்பந்தப்படாத பொதுமக்களும், நடக்க முடியாமல் நகர்ந்து கொண்டிருந்தார்கள். அவசரத்தில் ஊர்வலத்திற்கு போலீஸ் முன் அனுமதி வாங்கவில்லை. ஆனாலும், அந்த ஊர்வலத்தின் நிசப்தத்திற்குக் கட்டுப்பட்டு, பல்லவன் பஸ்கள் வழிவிட்டு நின்றன. ஆட்டோக்கள் அடங்கின. பொதுமக்களில் பலர் மிகப்பெரிய அந்த ஊர்வலத்தின் காரண காரியங்கள் புரியாமல் ஏதோ ஒரு உந்துதலில், அந்த மக்கள் வெள்ளத்தில் துளித்துளியாய் ஆறுகள் ஆறுகளாய்ச் சங்கமித்தார்கள். தேருக்குப் பின்னால் வந்த கட்டிடத் தொழிலாளர்கள், விபத்தில் இறந்தால் பத்தாயிரம் கொடு என்றோ, அல்லது எங்கள் வேலையை ஒழுங்குபடுத்த சட்டம் இயற்று என்றோ கோஷம் இயக்கவில்லை. மாடி மேலே மாடி கட்ட சாரம் கட்டி ஏறுகிறோம். தவறி விழுந்தால் சக்கையாவோம். தடுப்பதற்கு நாதியில்லை என்ற பழக்கப்பட்ட பாடலையும் பாடவில்லை. அந்தப் பாடலையும் அவர்களின் முழக்கங்களையும், பிணமான வேலு, சொல்லாமல் சொல்லிக் கொண்டு இருந்தான். காட்டாமல் காட்டிக் கொண்டிருந்தான்.

இரண்டு குடிசைப் பெண்களின் தோள்களில், கைபோட்டுத் தொங்குபவள்போல் நொண்டியபடி நடந்த அன்னவடிவு. அந்த ஜனசமுத்திரத்தைப் பார்த்தாள். அத்தனைப் பேரும்- அவர்கள் எங்கே பிறந்தவர்களோ, என்ன சாதியினரோ மதத்தினரோ - அங்கே கூடி அவனுக்காக அழுவதை உணர்ந்தபோது, அவள் உள்ளம் லேசாகிக் கொண்டு வந்தது. இதுநாள்வரை, அம்மாவைக் கவனிக்காமல் இருந்துவிட்டு, இப்போது அதற்குப் பிராயச்சித்தம் செய்பவன் போல், தாய்ப்பாசத்தில் தவிக்கும் கோவிந்தன், தாயை மறந்து, தன் மச்சானை நினைத்து அழுகின்றான். அத்தனை பெண்களும் அழுகிறார்கள். ஏதோ ஒரு பாசம், அவர்களைக் குலுக்குகிறது. அதுதான் பாட்டாளி வர்க்கப் பாசமோ? அவளுக்குத் தெரியுமோ தெரியாதோ? ஆனால் ஒன்று மட்டும் தெரிந்தது. அவள் அனாதையல்ல. பாட்டாளி வர்க்கத்தில் ஒருத்தி. அந்த பாட்டாளி இனத்திற்காகப் பாடுபட வேண்டிய ஒருத்தி, தனிப்பட்ட தனது சோகத்தை அவர்களிடம் சுமக்கக் கொடுக்காமல், அவர்களின் சுமையை சுமக்கும் அளவிற்கு வாங்கிக் கொள்ள வேண்டியவள். தனக்கு ஏற்பட்ட நிலைமை, பிற குடும்பங்களுக்கு நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டியவள். இது ஒரு நாளில் தீரும் பிரச்னையல்ல. அவள். அது தீர்வது வரைக்கும். ஒருநாள் கூட ஒயப்போவதும் இல்லை.