பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 147

அன்னவடிவு, சுற்றும்முற்றும் நோக்கினாள். ஒலத்தை உள்வாங்கி பாசத்தைக் கண்ணிராய்க் காட்டும் பாட்டாளிப் படையைப் பார்க்கிறாள். அவள் துயரத்தை எல்லோரும் பங்குப் போட்டுக் கொண்டதால் தனது சுமை ஐயாயிரத்தில் ஒன்றாய்க் குறைந்ததுபோல் தோன்றியது. வாழ்ந்த காலத்தைவிட செத்தபிறகு பலவானாக- பல்லாயிரக்கணக்கான இதயங்களை ஒன்று கூட்டி - ஒருங்கே இணைப்பவனாகத் தோன்றும் - தன் கணவனின் சடலத்தை பெருமிதத்தோடு பார்க்கிறாள். அவள் அழக்கூடாது. அவள் ஒரு போர் வீரனின் மனைவி. அவள் நடை தளரக்கூடாது. அவள் ஒரு வீராங்கனை.

அன்னவடிவு தனக்குத் தோள் கொடுத்த இரண்டு பெண்களையும் பாசம் பொங்கப் பார்த்துவிட்டு, கைகளை எடுத்து அவற்றை வீச்சாக்குகிறாள். தள்ளாடிய கால்களை சக்கரமாய் மாற்றுகிறாள். கம்பீரமாக நடக்கிறாள். கண்ணில் தெறிக்கும் நீர்த்துளிகளை எதையோ, யாரையோ, எந்த அமைப்பையோ சுண்டிவிடப் போகிறவள் போல் சுண்டி விடுகிறாள்.

'நான் என்பதும். நீ என்பதும் விலகி, எல்லாமே பொது என்பதுபோல் உறுதியாகி

அவள் -

அந்த ஊர்வலத்தில் ஒருத்தியாகிறாள். அந்த ஒருத்தியே ஊர்வலமாகிறாள்.

ఖీ