பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 5

"எப்பவும் போயிட்டு வாரேன்னு சொல்லுப்பா"

சரவணன், அம்மாவையும், அவள் பின்னால் நின்ற தங்கை வசந்தாவையும் ஒரு சேரப் பார்த்தான். சரஸ்வதிதேவிக்கு வயதானால் எப்படி இருப்பாளோ அப்படிப்பட்ட தோற்றம் வெள்ளைப் புடவையில், கூன்போடாத பாடவும் தெரியாத, இசைமேதை கே.பி. சுந்தராம்பாள் போன்ற தோரணை. இந்த அறுபதிலும், ஒரு பல்கூட விழவில்லை. ஆடவில்லை. அம்மாவின் தோளில் தலை வைத்த வசந்தா, மாதா என்ற முதுமை மரத்தின் இளமைக்கிளையைப் போலவே இருந்தாள். ஈரப்பசை உதடுகள், குளுமை பொங்கும் கண்கள், கிராமிய உடம்பும், கல்லூரி லாவகமும் கொண்ட ஒய்யாரம்.

அண்ணன், தன்னைப் பார்ப்பதை அப்போதுதான் பார்த்த வசந்தா, எதிர்திசையில் இரண்டாவது மாடி ஜன்னலில் இருந்து பார்வையை விடுவித்தாள். "அண்ணன் போகட்டும். அப்புறம் நானும் நீயுந்தானே." என்று அவனுக்கு மானசீகமாய் சொல்லிக்கொண்டாள். சரவணன், தங்கையை அதிகமாய் மிரட்டியதற்கு பிராயச்சித்தமாய், அவளை அன்புத் ததும்பப் பார்த்தபடி கதவைத் திறக்கப் போனான். வசந்தாவே ஒடிப்போய் கதவைத் திறந்து விட்டாள். அப்போது, படியேறி, வாசலுக்குள் நுழையப்போன அண்ணி தங்கம்மா, அவனைப் பார்த்து, முதல் மாடிப்படி முடிந்த தளத்தில், சற்று ஒதுங்கி நின்றாள். முத்தம்மா கடுப்பாய் பேசினாள்:

"இந்தாப்பா. வீட்டுக்குள்ள வந்து கொஞ்ச நேரம் இருந்துட்டு, தண்ணி குடிச்சுட்டுப் போ. நாமதான் கறுப்புச் சேலை கட்டுறோமே. ஆபிசுக்கு போற நேரத்துல. ஒண்னு உள்ள மொடங்கிக் கிடக்கணும். இல்லன்னா வெளில தள்ளி நிக்கணுமுன்னு சொல்லியா கொடுக்க முடியும்? நீ வா. நான்கூட எப்போவாவது நீ புறப்படும்போது, நேருக்கு நேர் நிற்கேனா? தானாத் தெரியணும். இல்லன்னா தெரியுறதைப் பார்த்துத் தெளியணும்."

சரவணன், அண்ணியை நோக்கினான். நாற்பத்திரண்டு வயதிருக்கலாம். அண்ணியின் கழுத்தில் ஆரம் போன்ற வட்டம். வெள்ளைக்கரை போட்ட கறுப்புப் புடவை. அண்ணியின் சிவந்த உடம்பு, செம்மைப் படுத்தி, செழுமைப்படுத்தியது. அவனை நேருக்கு நேராய் பார்க்க முடியாமல், அவள் ஒதுங்கி ஒதுங்கிப் போனாள். அவனை, இடுப்பிலும் தோளிலும் எடுத்து வளர்த்தவள். பிறந்தகத்திற்கு, அவனையும் கூட்டிக் கொண்டு போனவள். தலையைத் தாழ்த்திக் கொண்ட அவள் கண்களில் இருந்து, நீர் காலில் கொட்டியது. அவனுக்குத் தெரியாமலே, கால்களால் அதைத் தேய்த்துக் கொண்டாள்.