பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 வேரில் பழுத்த பலா

வந்திருக்கிறான். அந்த அண்ணியை, வேண்டாத விருந்தாளியாக அல்ல. வேண்டப்படாத வேலைக்காரியாக அம்மா நினைக்கிறாளோ? இந்த அண்ணியும் என்கிட்ட சொல்லித் தொலைச்சால் என்ன? எப்படிச் சொல்லுவாங்க. நான் எப்போ கேட்டேன்.? இன்னைக்கு சாயங்காலம், வீட்டுக்குப் போனதும், முதல் வேலை. இதுதான்.

உரத்த சிந்தனையோடும், பலத்த வேகத்தோடும், ஒரு சாலையின் முனைக்கு வந்து, இன்னொரு சாலைக்கு.வலப்புறமாய் திரும்பினான். நேராகப் போகிற வண்டிகளுக்கு வழிவிட்டுத்தான், குறுக்கே திரும்பும் வண்டிகள் நின்று நிதானித்து போகவேண்டும் என்பது சாலை விதிகளில் ஒன்று. இதுவே மனித நடைமுறையாக இருந்தால், நாடு எப்போதோ முன்னேறியிருக்கும். எங்கே முன்னேற?

அதோ லாட்டரிக்கடை. ஒவ்வொருவரும் கோடீஸ்வரராக ஆகும் உழைப்பில்லா முயற்சிக்கு உழைக்கும் பணத்தை வீணாக்குகிறார்கள். ராஜஸ்தான் பம்பர் குலுக்கலாம். பூடான் கோடி குலுக்கலாம். ஒரு காலத்தில் ஒரு ரூபாய் - ஒரு சீட்டு - ஒரு லட்சம் என்று இருந்தது. ஆக்கப் பணிகளுக்கு ஒரு ஏழையின் ஒரு ரூபாய் போவதில் தப்பில்லை. ஆனால் இப்போது, உழைப்பிற்குப் பதிலாய் ஊதாரித்தனந்தான் முன்னேறியிருக்கிறது. என்னமாய் ஏழை மக்கள். துள்ளித் துள்ளி லாட்டரி அடிக்கும் லாட்டரி பையனையே பார்க்கிறார்கள்.

இது போதாது என்று பார்த்தால், டிரான்ஸிஸ்டர் செட்டில் கிரிக்கெட் வர்ணனை. ஒவ்வொருவரும், தனக்கு கிரிக்கெட் தெரியும் என்று மற்றவர்கள் நினைக்க வேண்டுமாம். எத்தன ஓவர். எவ்வளவு ரன். கபில்தேவ் பரவாயில்லயா. ஆமாம் கவாஸ்கருந்தான். உழைப்புக்கு ஈடு இணை இல்லை" என்று பஸ்ஸில் ஒரு விளம்பரம். அதன் அடுத்த முனையில் லாட்டரி விளம்பரம். என்ன நாடோ என்ன மக்களோ. இந்த நாட்டில் இருந்து லாட்டரிகளும், கிரிக்கெட்டும் துரத்தப்பட்டாலொழிய நாடு முன்னேறாது. ஆபீஸ்ல ஒவ்வொருவரும் பைலைப் பார்க்காமல், லாட்டரி ரிசல்டைப் பார்க்கான். அல்லது ஏழை மக்கள், தாமாய் வந்து சொல்வதைக் காதில் போடாமல், கமென்டரியை போடுறான். ஒரு வருஷத்துல எத்தனை நாளைக்குப்பா கிரிக்கெட் சண்டை? ஆமாம். இது விளையாட்டுப் போட்டியல்ல. ஏதோ பாகிஸ்தானும், பாரதமும் மீண்டும் போருக்குப் போய்விட்டது போன்ற வினையான போட்டி.

சரவணன், பதட்டப்படாமல், நல்லது கெட்டது என்று நாலையும் சிந்தித்தபடி, இடது காலை தரையில் ஊன்றி, ஒரு 'பல்லவன் போவதற்காகக் காத்திருந்தான். அப்போது விசில் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். போக்குவரத்துக் காவலர் அவனை சைகை செய்து