பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 13

"போங்க ஸார்" சும்மா எழுதுங்க ஸார். சத்தியமாய் கோர்ட்ல இதை கன்டெஸ்ட் செய்யமாட்டேன். நீங்க காசு வாங்குனதையோ, காருக்கு சல்யூட் அடிச்சதையோ சொல்ல மாட்டேன். ஏன்னால், இப்போதெல்லாம் நான் பொய் பேசாவிட்டாலும், உண்மையை சொல்லாமல் இருக்கத் தெரிஞ்சிக்கிட்டேன். சும்மா எழுதுங்க ஸார் என் வரைக்கும் நான் வண்டி ஒட்டுனது தப்புத்தான். தப்புக்குத் தண்டனை கிடைச்சால்தான் எனக்கும் சாலைவிதி தலைவிதி மாதிரி மனசுல நிற்கும். உம். எழுதுங்க எனக்கும் மனிதாபிமானம் உண்டு. ஒங்களைக் காட்டிக் கொடுக்கறதுனால இந்த வழக்கம் நின்னுடப் போறதில்ல. இந்த சமூகத்தை மாற்றாமல், ஒங்களை மாற்றுறது அர்த்தமற்றதுன்னு எனக்குத் தெரியும்'

போலீஸ்காரர். அவனை ஆழம் பார்த்தார். இதற்குள் பல சைக்கிள் கிராக்கிகள் தப்பிக் கொண்டிருந்தன. இவர் யார்? யாராய் இருப்பார்.?

"எங்க ஸார் வேலை பார்க்கிறீங்க?..." "கேஸ் எழுதுங்க சொல்றேன்." "தயவு செய்து போங்க ஸார். இது பஸ்ட் வார்னிங்னு நினைச்சுட்டு திருப்தியோட போங்க. அடேய். வண்டி. உன்னத்தாண்டா. நில்லுடா கம்மனாட்டி. ஒப்பன் வீட்டு ரோடா? நில்லுடா."

சரவணன், ஒரு ஏழையை ஏன் திட்டுறீங்க. வேணுமுன்னால் கேஸ் எழுதுங்க' என்று சொல்லப் போனான். கோளாரான சமூக அமைப்பில் ஏழைகள் தங்களோட தன்மானத்தை விலையாகக் கொடுத்தால்தான், சுதந்திரமாக நடமாட முடியும் என்பதை நினைத்தபடி, ஸ்கூட்டரை உதைத்தான்.

3

அந்த அலுவலகம், இஞ்சி தின்னாத குரங்குபோல் இயல்பாக இருந்தது.

சும்மா சொல்லக்கூடாது. அலுவலகத்தில் உள்ள அத்தனை ஊழியர்களும் பேரும், வேலையும் கையுமாக இருந்தபடிதான், கையாட்டி காலாட்டி வாயாடிக் கொண்டிருந்தார்கள். கிரிக்கெட் வர்ணனையைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பத்மா, ஒரு கோப்பில் பாதி கண் போட்டு எழுதியபடிதான். அவ்வப்போது மீதிக்கண்ணை எடுத்து, அருகே இருந்த