பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வேரில் பழுத்த பலா

சரவணன் அண்ணியிடம் அலுவலகத் தலைவலிகளைச் சொல்லப் போனான். அண்ணிக்கு விவரங்கள் புரியாது என்றாலும், அவற்றிலுள்ள விஷம் புரியும், அதை முறியடிக்கிற மருந்தையும் சொல்வாங்க. நீண்ட நாட்களுக்குப் பிறகு, அண்ணியிடம் மனம் விட்டுப் பேசிய திருப்தி. மனமே அற்றுப் போனது போல் பேச வேண்டும் என்ற ஆவல். நடந்ததை விளக்கி, தான் நடந்து கொள்ள வேண்டியதைக் கேட்பதற்காக, உட்காருங்க அண்ணி என்றான். உட்காரத்தான் போனாள். அதற்குள் வாசலில் செருப்புச் சத்தம், அம்மாவின் அதிருப்தியான குரல்.

தங்கம்மா, அவனிடம் சொல்லாமலே ஓடினாள். காபி டம்ளரைக் கூட எடுக்காமலே ஓடினாள். சரவணனுக்கு என்னவோ மாதிரி இருந்தது. அண்ணி எதுக்காக இப்படி பயப்படனும்? அம்மா இந்த அளவுக்கா அவங்களைப் பயமுறுத்தி வச்சிருப்பாங்க..?

சரவணன், எரிச்சலோடு கட்டிலில் சாய்ந்தான். காண்டிராக்டர் செளமி நாராயணனில் இருந்து, பியூன் அடைக்கலம் வரைக்கும். அவள் கண்ணில் விரல் வைத்து ஆட்டினார்கள்.

அவன் கண்களை மூடிக் கொண்டான். ஆனால், அந்தக் காட்சிகள் அதிகமாயின. மீண்டும் கண்களைத் திறந்தான். உள்ளங் கைகளை, வெறியாகப் பார்த்தான்.

"இதையா. லஞ்சம் வாங்குவதாய் சொல்றே? ஏய் செளமீ."

அவன், தன்னையறியாமலே கத்தினான்.

5

அலுவலக நேரத்திற்கு முன்னதாகவே வந்துவிட்ட அன்னத்தை, அது முடிந்து பத்து நிமிடம் கழித்து சேர்ந்தாற்போல் வந்த செளரிராஜனும், பத்மாவும், உமாவும் ஆளுக்கொரு பக்கமாய் உலுக்கினார்கள். உமா வாசல் பக்கமாய் நின்றபடி, சரவணன் வரும் வழியையும் கண் வைத்தாள். அவன் வருவதற்கு முன்பு ஆத்திரத்தைக் கொட்டி முடித்துவிட வேண்டும் என்ற ஆங்காரத்தோடு அவள் நின்றபோது, தலைமை கிளார்க் பத்மா பற்களைக் குத்தியபடி கேட்டாள்.

"அன்னம் ஒன் மனசுல என்னடி நினைப்பு? ஆபீஸர் கிட்டே போய் ஏன் எங்களை வத்தி வச்சே. ஏதாவது குறையிருந்தால், எங்க கிட்டே சொல்ல வேண்டியது தானே!"