பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 63

இவ்வளவு சீக்கிரமாய் எனக்குப் பொறுப்பு தீர்ந்திடுமுன்னு நான் நினைக்கல. ஏய். ஏய். வசந்தா. புறப்படுறியா. இல்ல. நான் கழுத்தைப் பிடிச்சுத் தள்ளிக் கொண்டு போகணுமா?"

வசந்தா நடுநடுங்கினாள். நான்கு பக்கமும் பார்த்தாள். அண்ணியை அப்போதுதான் மனுவி மாதிரிப் பார்த்தாள். அண்ணனைப் பார்க்க முடியாமல், கண்களைக் கைகளால் மூடினாள். சுவரிடம் போய், தலையை முட்டப்போவது போல் வைத்துக் கொண்டு கேவினாள். விம்மினாள். சுவர் வழியாய் நீரோடியது.

சரவணன், அவளை நோக்கி நடந்தான். வாய் தானாய் பேசியது

"இந்த நடிப்பெல்லாம் இனிமேல் வேண்டாம். இந்த வீட்ல நாங்க கெளரவமாய் வாழ விரும்புறோம். உம். எழுந்திரு. நீ போகாட்டால், நான் போவேன். திரும்ப முடியாமல் போவேன்' ஒன்ன கொலை செய்துட்டு போவேன்

அண்ணி இருவருக்கும் இடையே வந்தாள்.

"ஒரு பெண்ணை. அவள் எவ்வளவுதான் மோசமானவளாய் இருந்தாலும் அடிக்கப் போறது அநாகரிகம்."

"நான் அடிக்கப் போகல. அணைக்கிற இடத்துக்குக் கூட்டிட்டுப் போறேன். அண்ணி. நீங்களே கேளுங்க. ஒரு வேளை, அண்ணன் கூட வாரது அவமானமுன்னு நினைச்சால், அவளே போகட்டும். கேளுங்க அண்ணி. அவள் போகப் பேறாளா? நான் போகட்டுமா?"

இதற்குள் சத்தம் கேட்டு, தாய்க்காரி முத்தம்மா எழுந்தாள். ஒன்றும் புரியாமல் கண்ணைக் கசக்கினாள். அண்ணிக்காரி அழாக் குறையாய் பேசினாள்:

"இந்த மாதிரி வருமுன்னுதான். நான் அவள் கிட்டே... எத்தனையோ தடவை படிச்சுப் படிச்சுச் சொன்னேன். இப்போதாம்மா இந்தக் குடும்பம் தழைக்குது. ஒன்னால, எல்லாம் போயிடப் படாதும்மா.. மெட்ராஸுக்கு வந்ததால. நாம் மானத்துக்குப் பயப்படக் கூடாதுன்னு அர்த்தமில்லம்மா'ன்னு சொல்லித் தொலைச்சேன். என் பேச்சைக் கேட்டால் தானே? ஒன் கிட்ட கூட சொல்லாமச் சொன்னேன். நீயும் புரிஞ்சுக்கல."

அழுது கொண்டிருந்த மகளையும், அசையாமல் நின்ற மகனையும், உபதேசம் செய்யும் மருமகளையும் மாறி மாறிப் பார்த்த முத்தம்மாவும் அழுதாள். அழுகையோடு நிற்காமல், அழுகிப் போனவள் போல் ஒப்பாரி போட்டாள்.