பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 65

காதலுன்னு எதுவும் இல்லை. அப்படி இருக்கதாய் யாரும் சொன்னால், எழுதினால், அவங்களை ஒரே வெட்டாய் வெட்டணும். வெட்டுற வெட்டுல ஆள் தேறப்படாது. ஒரு ஆணும், பெண்ணும் பழகுறது தெரியாமல் பழகி, தான் ஆண் என்றோ, பெண் என்றோ பிரக்ஞை இல்லாமல், பேசுவது தெரியாமல் பேசி, காலத்தால், ஏற்படுகிற நட்புதான் காதலாய் மாறும். இதில், காதல் இன்ஸிடெண்ட். இந்த நட்பு காதலாய் மாறணுமுன்னும் கட்டாயமில்ல. காதலிக்காமலே, எத்தனையோ ஆண்பெண் நட்பு, நீங்க நினைக்கிற புனிதக் காதலை விட, ஆயிரம் மடங்கு அழுத்தமானது. நேயமானது. மகாத்மா காந்தியை, மீராபென் காதலிக்கவா செய்தாள்? இவங்க நட்புக்கு இணையாய் எந்தக் காதலாவது நிற்க முடியுமா? விவேகானந்தரை, நிவேதிதா காதலிக்கவா செய்தாள்? நான் ஒன்கிட்ட இவங்கள உதாரணமாய் சொல்றேன் பாரு. என் தப்புத்தான். ஒனக்கு. ஸில்க் ஸ்மிதாவையும், கிராஜுவேட்டாய் இருந்ததுனால அமிதாப் பச்சனையுந்தான் சொல்லனும். ஆனால் எனக்குத் தெரியாதே."

வசந்தா, தலையை ஆட்டாமல், உடம்பை அசைக்காமல் கிடந்தாள். சரவணனுக்கு அவளைப் பார்க்கப் பாவமாய் இருந்தது. கோபத்தைக் குறைத்தபடி பேசினான்.

"உண்மையான காதலுக்கு உட்படுறவங்க... ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கணுமுன்னு பழக மாட்டாங்க. அவங்களுக்கு. பழக்கத்துலதான் காதல் வரும். காதலே ஒரு பழக்கமாகாது. ஆனால் உனக்கு. நீ. காதலிக்கணுமுன்னே அவனைப் பார்த்தே. அவன். ஒன்னைக் கற்பழிக்கணுமுன்னே பார்க்கான். அவனோட நீ பழகுனது இல்ல. பேசினது இல்ல. அப்படியும் நீ அவனைப் பார்க்கணுமுன்னால், அது உள்ளத் தாகம் இல்ல. உடல் தாகம். இப்படிப்பட்ட நீ அவனையே கல்யாணம் செய்தாலும், அதற்குப் பிறகும் எவனையாவது பார்ப்பே. அதை காதலுன்னும் சொல்லிக்குவே."

முத்தம்மா, சத்தம் போட்டாள்.

"என்னடா. தலைகால் புரியாமல் நிக்கே. சின்னப் பெண்ணை இப்டியா மிரட்டுறது? எம்மா. தங்கம். நீ வந்தால் தான் தீரும்."

தங்கம்மா, கண்களைத் துடைத்தபடி வந்தாள்.

"ஏய் வசந்தா. இனிமேல் அவனைப் பார்ப்பியா?"

"பார்க்கமாட்டேன் அண்ணி. பார்க்க மாட்டேன். அண்ணாகிட்ட சொல்லுங்க அண்ணி!"