பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வேரில் பழுத்த பலா

பார்த்தால், இன்னும் இரண்டு நோட்டிஸ்களையும் எதிர்பார்க்கேன். அவனும் கட்டியிருக்க மாட்டான். நோட்டீஸ் வரும். வீட்டையும் காலி செய்யும்படி வீட்டுக்காரன் நோட்டிஸ் விடப்போறான். வீட்டுல துரோகம், நட்புல துரோகம். ஆபீஸ்ல துரோகம். எத்தனை துரோகத்தை ஒருத்தனே சமாளிக்கறது அண்ணி?"

"ஆபீஸ்ல என்னப்பா?"

"நான். ஆபீஸ்ல ஒழுங்காய் இருக்கேன். அதுதான் பிரச்சினையாய் வளருது. ஒரு நாளைக்கு விளக்கமாய் சொல்றேன்."

"கவலப்படாதேப்பா. நேர்மை வேற. கடவுள் வேற இல்ல. கடவுள் கைவிட மாட்டார். ஒன் அண்ணாவோட தர்மம் ஒன்னை உயர்த்திச்சு ஒன்னோட தர்மம் வசந்தாவைக் காப்பாற்றிட்டு. இதைவிட என்ன வேணும்? பேசாமல், இன்னைக்கு ஏதாவது ஒரு கோயிலுக்குப் போயிட்டு வா. எல்லாப் பிரச்சினையும் தானாய் தீரும்!"

சரவணனுக்கு, அண்ணி சொல்வது சரியாகப்பட்டது. அங்கேயேஅப்போதே அலுவலகத்திற்கு டெலிபோன் செய்தான். அன்னம்தான் எடுத்தாள். "நான். சரவணன். நீங்க அன்னமா? இன்னைக்கு ஆபீஸ் வர மாட்டேன் ஏ.ஓ.கிட்ட சொல்லிடுங்க.." என்று சொல்லிவிட்டு, போனை வைத்தான்.

அவனையே பார்த்தபடி நின்ற அண்ணி போய்விட்டாள். சரவணன், கோயிலுக்குப் புறப்படப் போனான். பிறகு யோசித்தான். என்ன கோவில்...என்ன குளம். உமாவுந்தான் கோயிலுக்கு போகிறாள். செளரிராஜன் வீட்டிலேயே பூஜை செய்கிறாராம். பத்மா பஜனை கூடப் பாடுவாளாம். காண்டிராக்டர், வீட்டுக்குள்ளேயே சின்னதா. நல்லதா கோயில் கட்டியிருக்கிறாராம். இந்தப் பெரிய மனிதர்கள் வழிபாட்டை ஏற்றுக் கொள்ளும் ஆண்டவன், இந்தச் சின்னவனின் வழிபாட்டை ஏற்றுக்கொள்ள, அந்த ஆண்டவனுக்கு ஏது நேரம்.

சரவணன் படுத்துக் கொண்டான். இரண்டு மணிநேரம் எழவில்லை. எழுந்தபோது, அவன் கண்களில் வசந்தா தென்பட்டாள். அம்மா, எதுவுமே நடக்காதவள் போல், வெற்றிலை பாக்கை இடித்துக் கொண்டிருந்தாள். அவனுக்கு வீடே ஆபீஸ் மாதிரி தெரிந்தது.

சரவணன் எழுந்தான் வீட்டைவிட, அலுவலகமே தேவையில்லை என்று புறப்பட்டான்.