பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

அலுவலகத்திற்குள் நுழைந்த சரவணன், நுழைந்தபடியே நின்றான். ஒருவேளை வீட்டில் இன்னும் தூங்கிக் கொண்டும். தூக்கத்தில் கனவுக் காட்சி வந்து கொண்டும் இருக்கிறதோ? சுற்றும் முற்றும் பார்த்தான்.

அவனை எதிர்பாராத கான்டிராக்டர் செளமி நாராயணன் திருதிருவென்று விழித்தார். நிர்வாக அதிகாரியின் மேஜையில் ஒரு கையை ஊன்றியபடி அலுவலகத்தையே கான்டிராக்ட் எடுத்ததுபோல, உமாவைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்த அந்த மனிதர், அசையாமல் நின்றார். அவர், தன்னையும் கொத்தடிமையாய் ஒப்பந்தம் எடுத்திருப்பது போல், குழைந்தும் நெளிந்தும் பேசிய செளரிராஜன், பத்மா, விலாவில் இடிப்பதை உணர்ந்து, அவளைப் பார்த்தார். அவளோ சரவணன் நிற்கும் இடத்தைச் சுட்டிக் காட்ட முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தாள். ஒயிலாக நின்றபடி, பல் தெரியச் சிரித்த உமா, சிரிப்பைப் பாதியில் விட்டாள். மொத்தத்தில் அந்த மூவரும், ஏதாவது சோப்புக் கம்பெனி விளம்பரத்தில், சிரித்தும், திடுக்கிட்டும், நிற்பது போல் போஸ்கள் வருமே, அந்தப் போஸ்களைக் காட்டியபடி நின்றார்கள். அலுவலகக்காரர்கள் அத்தனை பேரும் வேலையை விட்டுவிட்டு, விறைத்து உட்கார்ந்தார்கள். சரவணன், அடிமேல் அடிவைத்து நடந்தான். செளமி நாராயணன், கும்பிடு போட்டார்.

"என்ன மிஸ்டர் செளமி. என்ன இந்தப் பக்கம்?" "பிரண்ட்ஸ் பார்த்துட்டுப் போகலாமுன்னு வந்தேன் ஸார்." சரவணன், செளமி நாராயணனை ஏற இறங்கப் பார்த்தான். நாற்பத்தைந்துக்கும் ஐம்பதுக்கும் இடைப்பட்ட வயது.சிவப்பு நிறம், வட்டமுகம், நாகரிகமான சந்தனப் பொட்டு, சபாரி உடை, சாய்வான பார்வை, அயோக்கியப் பயல். பழிபழியாய் போட்டுட்டு. ஆபீஸ் வரைக்கும் வந்திருக்கான். எவ்வளவு திமிர் இருக்கணும்?

செளமி நாராயணன் நழுவப் போனார். சரவணன் நாவால் தடுத்தான்.

"நில்லுங்க மிஸ்டர்.செளமி. நீங்க ஏதோ டெம்போவுக்கு பில் கொடுத்ததாயும். நான் பணம் கட்ட மறுத்ததாயும் எழுதியிருக்கீங்க."

"அதாவது ஸார்."