பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 75

முடியாது. முடியவே முடியாது. எதிர்காலத்திற்கு அஞ்சுகிறவனால், இந்த நிகழ்காலத்தில் கூட நிம்மதியாய் இருக்கமுடியாது. இந்த அக்கிரமங்களை அங்கீகரித்து, இந்த அசிங்கம் பிடித்த நிர்வாக அதிகாரியைப் பார்த்தபடியே, என்னால் ராசியாக முடியாது. ராஜினாமாதான் செய்யப் போறேன். நேர்மைக்காரனின் நடவடிக்கையை சரிபார்க்க வேண்டிய பொறுப்பு அக்கிரமக் காரர்களின் கையில் உள்ளது. ஓநாய், ஆட்டுக்குட்டியிடம் நியாயம் பேசிய கதைதான். இந்தக் கதை எனக்கு வேண்டாம், என்னில் எழுதப்பட வேண்டாம்."

சரவணனுக்குள், அசைக்க முடியாத ஒரு உறுதி பிறந்தது. அவனுக்கே ஆச்சரியம். நெருக்கடி வரும்போது மனித மனம், அபரிமிதமான சக்தியை அளிக்கும் என்பது எவ்வளவு உண்மை உலகம் பரந்தது. வாழ்க்கை விசாலமானது. அதை, இந்த அலுவலக டப்பாவிற்குள் அடைக்கலாகாது. விடுபடனும், விட்டே ஆகணும். சரவணன் சிரித்தான். வெடிவெடியாய் சிரித்தான். வெறுமையாய்ச் சிரித்தான்.

விரக்தியின் விளிம்பில் நின்று, அதனால் முடக்கப்பட்டு, பிறகு அந்த விரக்தியின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளிப்பட்டவன் போல், சரவணன் அமைதியடைந்தான். அன்னம், எதற்கோ உள்ளே வந்தாள். அவன் இருந்த கோலத்தைப் பார்த்துவிட்டுப் பதறினாள்.

"ஸ்ார். லார்'

"இதை முதலில் படிங்க."

இலாகா பொறுப்பாளர்களின் உத்தரவைப் படிக்கப் படிக்க, அவளும், சரவணன்போல் அரைமயக்க நிலைக்குப் போனாள். பிறகு, உறுதியுடன் நிமிர்ந்தாள்.

"இது. அக்கிரமம் ஸார். அநியாயம் ஸார். விடப்படாது ஸார்."

"நீங்க. சாயங்காலம் ஆபீஸ் டயத்துக்கு அப்புறம் கொஞ்சநேரம் இருக்க முடியுமா?"

"இதைவிட எனக்கு என்ன ஸார் வேலை?."

"தொந்தரவுக்கு மன்னிக்கணும். ஆனால். இதுதான் என்னோட கடைசித் தொந்தரவு."

"ஸ்ார். ஸார்.”

"யெஸ். மேடம். யெஸ்."

"சாப்பிடுங்க ஸார்."