பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 81

டெலிபோனை வைத்த சரவணனை, அன்னம் சங்கடமாகப் பார்த்தாள். அழப் போகிறவள் போல் கேட்டாள்.

"யாரோட தங்கை? யாரோட கல்யாணம்?"

"நீ இன்னைக்கு எங்க வீட்டுக்கு வா. என் தங்கைக்குப் புத்திமதி தேவை. இந்தக் காலத்துல எப்படி எப்படிக் காதலிக்கணும் என்கிறதைவிட எப்டில்லாம் காதலிக்கக்கூடாது என்கிறது முக்கியம். பாவம். அவளுக்குத் தெரியல. நீ வந்து அட்வைஸ் பண்ணனும் திருந்திட்டாளாம். இருந்தாலும் நீயும் வந்து சொல்லணும்."

"யாரோட தங்கை. யாரோட கல்யாணம். லெட்டர்னு சொன்னிங்க."

"ஒ. அதுவா? எங்க அண்ணிக்காக, அவங்களோட தங்கையை கட்டிக்க, நான் தயாராய் இருக்கதாய் அண்ணியை லெட்டர் எழுதச் சொல்லியிருந்தேன்."

"எப்போ.. எப். எழுதப் போறாங்களாம்."

"இனிமேல் ஏன் எழுதுவாங்க. ஆமா. நீ ஏன் ஒரு மாதிரி ஆயிட்டே? இனிமேல் வேற பெண்ணை நான் நினைப்பேனா? இன்னும் ஒன்னால என்னைப் புரிஞ்சுக்க முடியல. சரியான லுஸ்ல."

சரவணன், அவள் கைகளைப் பற்றினான். அவள், அவன் தோளில் முகம் புதைத்து, "நீங்கதான் ஸார் லூஸ். சரியான லூஸ். என்னைப் புரிஞ்சுக்க இவ்வளவு நாள் எடுத்துக்கிட்ட லூஸ்" என்று சொல்லிச் சொல்லிச் சிணுங்கினாள். சிணுங்கிச் சிணுங்கிக் கூவினாள்.

சரவணன், அன்னத்தின் கைகளை ஆறுதலாகவும், ஆறுதல் தேடியும் பற்றிக் கொண்டிருக்கிறான். அகநானூற்றுப் பாடல்களின் தளமாய்ப் போன அவன் உள்ளத்தில் புறநானூறு போர்க்குரல் கொடுக்கிறது. அது இப்படித் தீர்மானித்தது.

நாளைக்கே அமைச்சருக்கும், அமைச்சகச் செயலாளருக்கும், தலைமை டைரக்டருக்கும், எல்லா விவரங்களையும் எழுதப் போகிறான். என்ன ஆனாலும் சரி. செளமி நாராயணனை, அலுவலகத்திற்கு உள்ளே விடப்போவதில்லை. அவனே, மாநில அரசு நிறுவனத்திற்கு கான்டிராக்ட் கொடுக்கப் போகிறான். இது கைசுத்தமான கான்டிராக்ட் என்று அனைவருக்கும் புரியும். தவறுதான். மேலிட ஆணைக்கு எதிராக இப்படி நடக்கக் கூடாதுதான். முன்பின் நடக்காததுதான். ஆனாலும் இது தவறப்போன நீதியை தவறாமல் இருக்கச் செய்யும் தவறு. ஆரோக்கியமான தவறு. சாயப்போகும் குலைவாழையை