பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 85

பொய்யர்களை போல் பட்டணத்துப் பங்களாக்களின் மவுசையும் மதிப்பையும் கொச்சைப்படுத்துவது போல்" தோன்றும், தலை தட்டும் குடிசைகளில் இருந்து, காலையில் ஆறு மணிக்கே அங்கு வந்து முருகன் கோவிலில் உச்சிக்கால பூஜை நடத்தப்படும் இந்தச் சமயம்வரை, அங்கேயே தவமிருக்கிறார்கள். இவர்களின் தலைகள், அங்குமிங்குமாகச் சுழல்கின்றன. ஒரு சிலர் அந்தக் கூட்டத்தின் இலக்கணப் படியான 'பிரபுக்கள், சிங்கிள் டியைக் குடித்துவிட்டு பீடியைத் தின்பது போல் உறிஞ்சுகிறார்கள். கட்டம் போட்ட கிழிசல் சட்டையைக் கொண்ட ஒரு அறுபது வயதுக் கிழவர் பொறுமையோடு எழுந்து சிறிது தூரம் நடந்து மீண்டும் இருந்த இடத்திலேயே வந்து அமராமல், இடம் பெயர்ந்து உட்கார்ந்தாலாவது கிராக்கி வருமா என்பதுபோல் இன்னொரு இடத்தில் உட்காருகிறார். ஒரு சில நடுத்தர வயது மனிதர்கள் தாடி வைத்திருக்கிறார்கள். தாடி என்று சொல்வதைவிட அதை வறுமையின் முள்ளென்று சொல்லலாம்.

முருகன் கோவிலுக்கு எதிர்த்தார்ப் போலிருந்த சாலையை அணைத்து பிளாட்பாரத்தின் தளம் தெரியாதபடி நெருங்கி உட்கார்ந்த இந்தக் கூட்டத்தில் சிறுவர்களுக்கும் குறைவில்லை. பாண்டுக் கூடையைச் சுற்றிவிட்டுக் கொண்டே பசியின் தலைச் சுற்றலை மறக்கப் பார்க்கிறார்கள். ஆனால் கூடை சுற்றச்சுற்ற அவர்கள் தலைகள் முன்னிலும் வேகமாகச் சுற்றுவது போல் உணர்கிறார்கள். ஒய்வு பெற்ற உத்தியோகக்காரர்களை விட அதிக வயது கொண்ட கிழவிகளின் எண்ணிக்கை முப்பதுக்கும்மேல் போகும். பல் போனாலும் வயிறு போகாத பாவத்தால் அவர்களும் உட்கார்ந்து பார்க்கிறார்கள். இவர்களைவிட அதிகமான இளம் பெண்கள் தார்ப்புழுதி அப்பிய கால்களைத் தரையில் ஊன்றி, முதுகை வளைத்து ஒருக்களித்து உட்கார்ந்து தொலைவில் தெரிகின்ற ஒவ்வொருவரையும் மேஸ்திரியாகப் பாவித்து, நேரத்தால் வீணடிக்கப்பட்டவர்கள் போல் கசிந்த கண்களோடு பசி யோகத்தால் நிஷடையில் இருப்பவர்கள்போல், கண்களை விலக்காமல் கால்களை நகர்த்தாமல் காத்திருந்து காந்திருந்து, காத்திருப்பதே புரியாமல் வாழ்க்கைக்குக் காத்திருக்கிறார்களா அல்லது மேஸ்திரிக்குக் காத்திருக்கிறார்களா என்பது அறவே தெரியாமல் அப்படியே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பெற்ற சின்னஞ்சிறு செல்வங்கள் அவர்களின் கால்களையே தொட்டிலாய் நினைத்து அமர்கின்றன. பல்லவன் பஸ்களையே சிறு தேர்களாய் நினைத்து கை கொட்டுகின்றன. ஒடும் கார்களை ஆனை கட்டிப் போரடித்த தாய்மாமன்களின் சீதனச் சிறப்பு வண்டிகளாய் நினைத்து கண் சிமிட்டுகின்றன. என்றாலும் சில குழந்தைகள் முடங்கிக் கிடக்கின்றன. அடித்துப் போட்ட நாயின் உப்பிய வயிறுபோல் வீங்கிய வயிற்றைத் தாங்கும் வழி தெரியாது குப்புறக் கிடக்கின்றன.