பக்கம்:வைணமும் தமிழும்.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

வைணவமும் தமிழும்



இவரது அருளிச்செயல்: ஒரே ஒரு பிரபந்தம் - 'பெருமாள் திருமொழி' (105 பாசுரங்கள்). இது முதலாயிரத்தில் நாச்சியார் திருமொழிக்கு அடுத்து இடம் பெற்றுள்ளது.

இவர் வாழ்ந்த காலம்: பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் இவர் வாழ்ந்த காலம் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கம் என்று அறுதியிடுவர்.[1] பேராசிரியர் மு. இராகவய்யங்கார் இந்த ஆழ்வாரும் திருமங்கை மன்னன், தொண்டரடிப் பொடிகள் ஆகிய மூவரும் சமகாலத்தவர் என்று கருதுவர்.

(7). திருப்பாணாழ்வார் : இவர் 'கங்கையிற் புனிதமாய காவிரி' நதிக் கரையிலுள்ள திரிசிரபுரம் உறையூரில் திருமாலின் 'ஶ்ரீவத்சத்தின்' (மறு) கூறாகக் கார்த்திகை மாதம் உரோகிணி நட்சத்திரத்தில் ஓர் அந்தணாளனது நெற்பயிர்க்கழநியில் தோன்றினார். பாணர் குலத்துப் பிறந்தான் ஒருவன் தன் நல்லூழின் காரணமாக மருவிய காதல் மனையாளின் மலடு நீங்க அந்தத் தெய்விகக் குழந்தையை எடுத்து வளர்த்து வந்தான்.அந்தக் குழந்தையும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது. இயற்கையிலேயே இளமைதொட்டு உலகப் பற்றற்று எம்பெருமானது இணைத் திருவடித் தாமரைகட்கே தம் மனத்தைப் பறி கொடுத்தார். வேதாந்த தேசிகர் இவரைப் ‘பாண்பெருமாள்’[2] என்றே சிறப்பித்துப் பேசுவர். 'பாணர்’ என்ற திருநாமத்துடன் விளங்கிய 'பாண்பெருமாள்' நாரத முனிவர் போன்று ஞான பக்தி வைராக்கியங்களுடன் இசைத் திறனும் வாய்க்கப்பெற்ற பாணருக்குச் சேனை முதலியார்


  1. History of Tamil language and literature-p. 110
  2. தே.பி. 130 (அமிர்தாசுவாதினி)