பக்கம்:வைணமும் தமிழும்.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

வைணவமும் தமிழும்


கூடிய விசாக நட்சத்திரத்தில் அவதரித்தார். தந்தையார் காரியார் என்னும் செல்வர். அன்னையார் உடைய நங்கையார். பெற்றோர் இவருக்கு இட்டபெயர் 'மாறன்' என்பது மற்றொரு பெயர் 'சடகோபன்' என்பது பிறந்த நாள் தொட்டுக் குழந்தை பாலுண்ணல் முதலிய இயல்புகள் ஒன்றுமின்றி இருந்தது. அது பிறந்த பன்னிரண்டாம் நாள் அவ்வூரில் எழுந்தருளியுள்ள பொலிந்து நின்ற பிரானின் திருமுன்பு அக்குழந்தையை விட்டனர் பெற்றோர். அஃது அங்குள்ள புளிய மரத்தடியில்[1] சென்று அமர்ந்தது. அங்ஙனம் அமர்ந்த குழந்தை பதினாறு வயது வரை கண்விழித்துப் பார்த்தல் பேசுதல் முதலியன ஒன்றுமின்றி இறைவனை நினைந்து அமர்ந்திருந்தது.

அயோத்தி முதலான இடங்கட்கு திருத்தலப் பயணமாகச் சென்ற மதுரகவி ஆழ்வார் தென் திசையில் தோன்றிய பேரொளியை வழிகாட்டியாகக் கொண்டு திருநகரிக்கு வந்து சேர்ந்தார். ஆழ்வார்நிலையைக் கண்டு ஒரு சிறு கல்லை எடுத்து அவர்முன் இட்டு ஒலியுண்டாக்கினார். ஆழ்வார் கண் விழித்துப் பார்த்தார். மதுரகவிகள் அவருடன் பேச நினைத்து "செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்"[2] என வினவினார். அதற்கு நம்மாழ்வார். “அத்தைத்தின்று அங்கே கிடக்கும்” என்று விடையளித்தார்.


  1. இஃது உறங்காப்புளி என வழங்கப் பெறும். திருவனந்தாழ்வானே இந்த மரமாக வந்து அவதரித்தருளியதாக ஐதிகம். ஆழ்வார் எழுந்தருளிய மரத்தைப் பின்னுள்ளோர் திருப்புளியவாழ்வார் என வழங்கினார்.
  2. செத்தது -உடல் அறிவற்றது; சிறியது - உயிர், அஃது அணு வடிவமானது; பிறத்தல் - உயிர் தன் வினைகட்கேற்ப உடம்பை அடைதல், எத்தைத் தின்று- எதனை அநுபவித்து.