பக்கம்:வைணமும் தமிழும்.pdf/202

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ சமயத் தத்துவம் | 185

’‘இருப்பது. அணுவின் வடிவினையுடைய இந்த ஆன்மா ஆனந்த வடிவினைக் கொண்டது; என்றும் நிலை பெற்றிருப்பது. இது கண்முதலிய இந்திரியங்கட்குத் தோற்றாது; மனத்தாலும் இதனை நினைக்க முடியாது.இதனைப் பகுதிகளாகவும் பிரிக்க முடியாது; அவயவமும் அற்றது. வளர்தல், பருத்தல், குன்றுதல் முதலிய வேறுபாடுகள் இதற்கு இல்லை. அறிவு மயமாக இருக்கும் இந்த ஆன்மா அறிவுக்கும் இருப்பிடமானது. இந்த அறிவு ‘தர்மபூதஞானம்’ என வழங்கப்பெறும். இதனால் ஆன்மா ‘தர்மிபூதஞானம்’ என வேறொரு பெயராகவும் வழங்கப் பெறும். இந்தச் சீவான்மா தனக்கு எப்பொழுதும் தோன்றிக் கொண்டே இருக்கும். தன்னைத் தான் என்று அறியும்பொழுது தர்மபூதஞானம் உதவ வேண்டும் என்பதில்லை. ஆனால் சீவான்மா தன்னைத் தவிர வேறு எந்தப் பொருளையும் தன் தர்மபூதத்தால் மட்டிலுமே அறிய முடியும். தன் சொரூபத்தைத் தர்மபூதஞானத்தைக் கொண்டும் அறியலாம். ஆன்மா இறைவன் ஏவியபடி நடப்பது, அவனால் தரிக்கப்பெற்று, அவனுக்கு அடிமையாகவே இருப்பது. இதனை நன்கு உணர்ந்த ஆழ்வார்கள் தம் பாசுரங்களில் இத்தன்மையை வெளியிட்டுள்ளனர். பூதத்தாழ்வார் “நேர்ந்தேன் அடிமை”[1] என்பார்;” “அவற்குப் அடிமைப்பட்டேன்”[2]என்று கூறுவர் பேயாழ்வார். திருமழிசையாழ்வாரோ “ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பிடும்பை”[3] என்று இக்கருத்தில் ஊற்றம் காட்டுவர். நம்மாழ்வார் தமக்கே உரிய தனி முறையில் “உறுவதாவது. திருக்குருகூர் அதனுள், குறிய மாண் உரு ஆகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட் செய்வதே”[4] என்று அருளிச் செய்வர்.


  1. 1. இரண்-திருவந்- 80.
  2. 2. மூன்-திருவந். 37
  3. 3. நான்- திருவந்-95.
  4. 4. திருவாய். 4.10:10