பக்கம்:வைணமும் தமிழும்.pdf/231

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

வைணவமும் தமிழும்


நம்முடைய ஆணையை மீறித் தன் இச்சையின்படி ஒழுகிப் போந்த இவனைக் குற்றங்களுக்கேற்பத் தண்டிக்காமல் நாம் ஏற்றுக் கொள்ளின் நாம் ஏற்படுத்திய சாத்திரங்களின் மரியாதை குலையாதோ? என்றல்லவா நும் திருவுள்ளத்தில் ஒடுகின்றது? அங்கனமாயின் நும்மை நாடி வந்த இவனைக் காக்காமல் இவனுடைய குற்றங்களை மட்டிலும் நோக்கித் தண்டித்தால் உம்முடைய அருட்குணம் நிலைப்பது எவ்வாறு? இவனைக் காப்பாற்றியபொழுதன்றோ உம் அருட்குணம் ஒளிபெறும்? “ இவனைத் தண்டிக்கவில்லையேல் சாத்திரம் நிலையாது; இவனைக் காக்கவில்லையேல் அருள் முதலிய குணங்கள் ஒளி பெறா” என்று அஞ்ச வேண்டா, உம்மைச் சிறிதும் நோக்கிப் பாராது தன்னிச்சையில் செல்பவனிடம் சாத்திரத்தைப் பயன்படுத்துவீர்; உம்மை அன்புடன் நாடி வந்த இவனைப் பாவங்களினின்றும் நீக்கிக் காப்பாற்றுவீர். இப்படிச் செய்தால் சாத்திரமும் பழுது படாது; உம்முடைய அருட்குணமும் உயிர் பெற்றுத் துலங்கும், இவ்வாறு எம்பெருமானுக்கு ஏற்ற பற்பல இனிய சொற்களைப் பகர்ந்து, அவன் சினத்தை மாற்றி, அவனுக்குச் சேதநனிடம் அருள் பிறக்குமாறு செய்வர். இவ்வினிய சொற்களாலும் ஈசுவரனது நெஞ்சம் இளகவில்லையேல், பிராட்டியார் தம் அழகைக் காட்டி அவனைத் தம் வசப்படுத்திச் சேதநனை அங்கீகரிக்குமாறு செய்வர்.

பிராட்டியார் சேதநனை நோக்கிப் பேசுவது: ‘உன் குற்றங்களின் மிகுதியைப் பார்த்தால், உனக்கு ஓரிடத்திலும் காலூன்ற இடம் இல்லை. ஈசுவரன் யாதொன்றாலும் தடை செய்யப்பெறாத சுவாதந்திரனாதலால் குற்றங்களைப் பத்துப் பத்தாகக் கணக்கிட்டும் அறுத்து அறுத்து நுகர்விப்பான்.