பக்கம்:வைணமும் தமிழும்.pdf/310

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நலம் அந்தம் இல்லதோர் நாடு

293


திருவருளைப் பெற்ற முமுட்சுகள்தாம் இந்தநீள் விசும்பினை அடையமுடியும்.இவர்கள் இந்தப்பூவுலகிற்குத் திரும்பி வருதல் இல்லை. இதனால் இது மீளா உலகம் என்ற பெயரையும் பெற்றுள்ளது. பிரளய காலத்தில் இவர்கட்கு அழிவு இல்லை. இறைவன் திருவுளப்படி இவர்கள் எந்த உருவத்தையும் மேற்கொள்வர்.

5. பரமபதநாதன் : இவன் வீற்றிருக்கும் இடம் மேற்குறிப்பிட்ட திருமாமணி மண்டபம். இவன் வீற்றிருக்கும் சீரிய சிங்காதனம் - அரியணை - அற்புதமான கோப்புடையது. பன்னிரண்டு இதழ்களையுடைய நானா சக்தி மயமான திவ்விய செந்தாமரைப் பூவின்மீது விசித்திரமான கட்டிலைக் கொண்டது. இந்தக் கட்டிலின்மீது பல்லாயிரம் சந்திரர்களை உருக்கி வார்த்தாற்போன்ற குளிர்ந்த தன்மையுடைத்தான திருமேனியையுடையதனாய், கல்யாண குணங்கட்கு அந்த மில்லாமையினால் அனந்தன் என்ற திருநாமம் உடையனாய், எல்லாவித அடிமைத் தொழில் புரிபவர்க்கெல்லாம் உபமான நிலமாயிருத்தலால் சேஷன் என்னும் திருநாமமுடையவனாகிய திருஅனந்தாழ்வானாகிய படுக்கையில் வெள்ளிமலையின் உச்சியில் பல்லாயிரம் பகலவன் உதித்தாற்போல் இருக்கும் ஆயிரம்பணாமுடி மண்டலமாகிய சோதி மண்டலத்தின் நடுவில்தான் பரமபத நாதன்-பரவாசுதேவன் வீற்றிருப்பான்; அருள் தேவியான பெரிய பிராட்டியார் வலப்பக்கத்திலும், பொறைதேவியான பூமிப்பிராட்டியாரும் ஆனந்ததேவியான நீளாப்பிராட்டியாரும் இடப்பக்கத்திலும் இருப்பர். இங்கு ஆனந்தன், கருடன், விஷ்வக்சேனர் (சேனை முதலியார்) முதலான நித்திய சூரிகளும், இவ்வுலகத்தளைகளினின்றும் விடுபட்டமுத்தரும் அநுபவித்தற்குரியனாய் இருப்பன்.