பக்கம்:வைணமும் தமிழும்.pdf/340

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
15. சம்பிரதாயங்களாக
மேலும் சில

முன்னர்ச் சுட்டியது போக மேலும் சில ஈண்டுக் காட்டப்பெறுகின்றன. முதலில் வைணவ ஆகமங்கள்பற்றிய குறிப்புகள் தரப்பெறுகின்றன.

1.வைணவ ஆகமங்கள்: பாஞ்சராத்திரம், வைகானசம் ஆகிய இரண்டும் வைணவ ஆகமங்கள் ஆகும். எம்பெருமானை உபாசிப்பது மானசம், ஓமம், விக்கிரகஆராதனம் என்று மூன்று விதமாக நடைபெறும். மூன்றாவது வகை ஆத்மார்த்தம் என்றும் பரார்த்தம் என்றும் இருபிரிவினையுடையது. ஒருவர் தம் குடும்பநலன்களைக் கருதித் தம் இல்லத்தில் எம்பெருமானின் திருமேனியை எழுந்தருளப்பண்ணித் தம் சக்திக்கு ஏற்றவாறு ஆராதிப்பது ஆத்மார்த்தம் ஆகும். வீட்டில் ஏற்றப்பெற்ற விளக்கு எங்ஙனம் வீடு முழுதும் ஒளியை உண்டாக்குகின்றதோ அம்மாதிரியே இவ்வாராதனம் அவர்தம் குலம்முழுவதும் மேம்பாடு அடைவதற்குக் காரணமாக இருக்கும். பரார்த்தம் என்பது உலக நலன்களைக் கருத்தில் கொண்டு திருக்கோயிலில் எழுந்தருளப் பண்ணியிருக்கும் திருமேனிகளை விதிப்படிவழிபடுவது.சந்திர சூரியர்களின் ஒளி உலகினருக்குப் பயன்படுவதுபோலே இந்த வழிபாட்டால் உண்டாகும் பலன் உலகம் முழுவதையும் வாழ்விக்கும்.