பக்கம்:வைணமும் தமிழும்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாசுரங்களில் அகப்பொருள் தத்துவம்

67



(2) தாய்ப் பாசுரங்கள் : தாய்ப் பாசுரங்கள் ஈசுவர பாரதந்திரியத்தையும் அவனே உபாயமாகின்றான் என்பதையும் தெரிவிக்கின்றன. பெண்பிள்ளையைப் பெற்று வளர்ப்பவள் தாய். அப் பெண் தக்க வயதையடைந்ததும் பேராண்மைக்கு இருப்பிடமாகவுள்ள எம்பெருமானிடம் கழிபெருங் காதலையுடையவளாகின்றாள். அவன் இருக்குமிடத்தைப் போய்ச் சேரவேண்டும் என்று பதறுகின்றாள். இங்ஙனம் பதறும் தன்மகளைத் தடுத்து நிறுத்துகின்றாள் திருத்தாயார். தலைவனே தலைவி இருக்கும் இடத்திற்கு வரவேண்டும் என்பது நடைபெற வேண்டிய ஒழுங்குமுறை என்றும், அங்ஙனமின்றி தலைவியே தலைவன் இருக்கும் இடத்திற்குப் புறப்படுவது குலமரியாதைக்குச் சிறிதும் பொருந்துவதன்று என்றும் நினைக்கின்றாள் தாய்.

திருமந்திரத்தின் இரண்டாவது சொல்லாகிய 'நம' என்பது இந்நிலையைக் குறிக்கின்றது. இச்சொல்லை ந+ம என்று இரண்டாகப் பிரிக்கலாம். இவ்விரண்டு எழுத்துகளும் தனித்தனிப் பொருளைத் தருதலின் பதங்களாயின.[1] இவற்றுள் ஆறாம் வேற்றுமையுடன் கூடிய ‘ம’ என்னும் பதம் சேதநன் ஈசுவரனுக்கு உரியவன் என இயம்பும் நான்காம் வேற்றுமையின் பொருளுக்கு மாறாய்த் 'தனக்குத்தான் உரியன்' என்னும் பொருளைத் தருகின்றது. ஆனால் ‘ந’ என்னும் பதமோ அதற்கு எதிர்மறைப் பொருளால் அதனைத்தடுத்து நிறுத்தித் தனக்குத் தான் உரியனல்லன் என்பதை அறிவிக்கின்றது.[2] ஈசுவரனுக்கு உரியவன் என்பது பெறப்படுகின்றது. இம்முறையில் இச்சொல் ஈசுவர பாரதந்திரியத்தைத் தெரிவிக்கின்றது. அஃதாவது இச்


  1. முமுட்சு-78
  2. முமுட்க-79,80