பக்கம்:வைணமும் தமிழும்.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

வைணவமும் தமிழும்


இழந்து கிடந்த மகாராஜரைக் கண்டு[1] அவர் குறையைத் தீர்த்த பின்னரே தம் இழவில் நெஞ்சு சென்றது. அங்ஙனமின்றிக்கே, இப்போது இவை குறைவற்றிருக்கின்ற இதுதான் இவள் பாக்கியமாயிருக்குமிறே” என்பது.

மேல் வருவனவற்றைத் தெரிந்துகொண்டு அதற்கிணங்கக் காரியம் செய்யவல்ல சாதுர்யமே 'மதி' எனப்படும்.[2] அப்படிப்பட்ட சாதுர்யத்தினால் மாண்குறள் கோலவடிவு காட்டிய யாசகனாயினான்.[3] ‘அந்தக் குணத்தினால் என்னை ஈடுபடுத்தி என்னை இப்பாடுபடுத்துவதற்காகவே என்ற ஆழ்வார் நாயகியின் கருத்து மதியினால் கள்வர்க்கு என்ற சொற்களில் கண்டு மகிழலாம். 'கள்வம்' என்பது முதலில் சிறிய வடிவினைக் காட்டிய பிறகு பெரிய வடிவான வஞ்சகம் என்று கூறுவர் திருமாலை ஆண்டான். ஒன்றை நினைத்து ஒன்றைச் செய்த மாயமே கள்வம் என்பதாக எம்பெருமானார் நிர்வகிப்பர்.

‘ஒருத்தி மதியெல்லாம் உள்கலங்கி மயங்குமால்’ என்ற செய்தியைக் கூறி வருமாறு பணிக்கின்றாள் ஆழ்வார் நாயகி.


  1. மகாராஜர்-சுக்கிரீவன். இப்படி குறிப்பிடுவது வைணவ மரபு.
  2. கீழே கழிந்து போன விஷயத்தைப்பற்றின உணர்வு “ஸ்மிருதி” எனப்படும். மேலே வரப் போகின்ற விஷயத்தைப் பற்றின உணர்வு ‘மதி ஆகும். அப்போதைக்கப்போது நடக்க வேண்டிய உணர்வு ‘புத்தி எனப்படும்; முக்காலங்களையும் பற்றின உணர்வு பிரஜ்ஞை (பிரக்ஞாவஸ்தை) என்று வழங்கப் பெறும்.
  3. மறைந்த மாண்புமிகு தொழிலதிபர் ஜி.டி. நாயுடு ஒரு சமயம் என்னிடம் ரசசோக்தி’ யாகச் சொன்னது; திருமால் கயவடிவினனாகத்தான் மாவலியிடம் வந்தான். தான் இரக்கப் போகிறோமே என்ற எண்ணம் மனத்தைக் குறுகச் செய்தது; மனம் குறுகவே உடலும் குறுகி விட்டது - வாமன்னாகிவிட்டான் என்பதாக. (திருப்பதியில்1975 என்பதாக நினைவு).