பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. வானமாமலை

13

சென்றுபோன பொய்யெலாம் மெய்யாகச்
சிந்தைகொண்டு போற்றுவாய் போ போ போ
வென்றுநிற்கு மெய்யெலாம் பொய்யாக
விழிமயங்கி நோக்குவாய் போ போ போ
வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டுவார்த்தை கற்கிலாய் போ போ போ
நூறுநூல்கள் போற்றுவாய் மெய்கூறும்
நூலிலோத் தியல்கிலாய் போ போ போ
மாறுபட்டவாதமே ஐந்நூறு
வாயில் நீள ஒதுவாய் போ போ போ
சேறுபட்ட நாற்றமும் தூறுஞ் சேர்
சிறிய வீடு கட்டுவாய் போ டோ போ
ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ
தருமமொன் றியற்றிலாய் போ போ போ
நீதிநூறு சொல்லுவாய்—கா சொன்று
நீட்டினால் வணங்குவாய் போ போ போ
தீதுசெய்வ தஞ்சிலாய் நின்முன்னே
தீமைநிற்கி லோடுவாய் போ போ போ
சோதிமிக்க மணியிலே காலத்தால்
சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ

தான் நேசிக்கின்ற பாரத மக்களின் சிறுமைகளைக் கண்டு பாரதி சீறுகிறார். நூற்றாண்டுகளாக அடிமை மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் நமது மக்களை விழித்தெழுந்து சுதந்திர வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும்படி வேண்டுகிறார். சுதந்திரத்திற்காகப் போராடும் வீறுகொண்ட மக்களை ஒரு மனிதனாகக் கற்பனை செய்து, அவனை வா, வா என்று வரவேற்கிறார்.

ஆழ்ந்த அடிமை மோகத்தில் ஆழ்ந்து கிடந்த மக்களை, விழித்தெழச்செய்து, அடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடச் செய்து, அவர்களுடைய உள்ளங்களில் மாபெரும் கிளர்ச்சியைத் தூண்ட வேண்டியிருந்தது. மக்கள் தன்னம்பிக்கை இழந்தவர்களாக இருந்தார்கள். பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியாதென்ற செயலூக்கமற்ற நிலைமையில் மூழ்கியிருந்தார்கள். இத்தகைய மக்களை வீரமூட்டி, உணர்ச்சிகொள்ளச் செய்து, அடிமைத்தனத்தை உதறித்தள்ளும் செயலில் ஈடுபடுத்தி, ஒன்றுபட்ட உணர்ச்சியுடைய ஒரு பெரும் விடுதலைப்படையை உருவாக்குவது,