பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

வ. உ. சி.

உதவியால் ஒரு கப்பலை ஏற்பாடு செய்தார். அது இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே சரக்கு ஏற்றிச் சென்றது. பிரிட்டிஷ் கப்பல் கம்பெனி, சரக்குக் கட்டண விகிதத்தைக் குறைத்தது; பயணிகளின் கட்டணத்தையும் குறைத்தது. ஆயினும் இந்திய வணிகர்கள் அதிகக் கட்டணம் கொடுத்தாவது சுதேசிக் கப்பலில் பயணம் செய்யவும், சரக்கு அனுப்பவுமே விரும்பினார்கள். பின் பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் ஒரு பொய்வழக்கைச் சுதேசிக் கப்பல் மீது தொடர்த்தது. சுதேசிக் கப்பல், தங்கள் கப்பலின் மீது மோத வந்ததாகப் புகார் செய்தது. ஆங்கிலேய மாஜிஸ்டிரேட் திருப்தியடையும்படிகூட வழக்கை நிரூபிக்க முடியவில்லை. எல்லா முயற்சிகளிலும் பிரிட்டிஷ் நிறுவனம் தோல்வியடைந்தது.

பின்னர் சிதம்பரம் பிள்ளை, இரண்டு கப்பல்களை பம்பாயிலிருந்து ஒப்பந்தம் செய்தார். காலியா, லாவோஸ் பெயர்களுடைய கப்பல்கள் அவை. பிரிட்டிஷ் நிறுவனம்,சுதேசிக் கப்பல் நிறுவனத்தை அழித்துவிடுவதற்கு எந்த அநியாயமான வழியையும் கடைப்பிடிக்கத் தயங்கவில்லை. அவற்றைச் சிதம்பரம்பிள்ளை பொதுக்கூட்டங்களில் விளக்கினார். மக்களின் ஆதரவைத் திரட்டினார். சதிகள் எதுவும் பலிக்காமல் போகவே நேரடியாகத் தலையிடும்படி ஆட்சியின் அதிகாரவர்க்கத்தைப் பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் வேண்டிக் கொண்டது. சுதேசி நிறுவனத்தைச் சட்டங்களின் துணையோடு அடக்கும்படியும் வ. உ. சி.யைச் சிறைக்கு அனுப்பும் படியும் கேட்டுக்கொண்டது.

பெருந்தடைகளைச் சமாளித்து அரசாங்கத்தின் எதிர்ப்பையும் மீறிக் கப்பல் நிறுவனத்தை நடத்த வேண்டியிருக்கிறது என்ற நெருக்கடி நிலையை அறிந்த சுதேசி நிறுவனத்தின் பங்குதாரர்கள் சிதம்பரம் பிள்ளையை அரசியல் வாழ்க்கையிலிருந்து விலகிக்கொள்ளும்படி வற்புறுத்தினார்கள். அவர்கள் சுதேசி உணர்வைப் பயன்படுத்திப் பெரும் லாபம் சம்பாதிக்கும் ஆசையோடு சுதேசிக் கப்பல் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தார்கள். கப்பல் நிறுவனம், அரசியல் தெருக்கடிக்குள்ளாவதைக் கண்டு பதறினார்கள். அரசியலையும் வணிகத்தையும் பிரிக்க வேண்டுமென்று யோசனை சொன்னார்கள். சிதம்பரம் பிள்ளை இதற்குச் சம்மதிப்பாரா? கம்பெனி நடத்தியதே அவரது அரசியல் திட்டத்தின் ஒரு பகுதி தானே! சுதேசியம், சுயராஜ்யத்திற்கு ஒரு பாதை என்று தானே இம்முயற்சியில் அவர் ஈடுபட்டார். அவர் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைச் சுமுகமாக நடக்க விட்டுப் பிரிட்டிஷ்