பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

வ. உ. சி.

டெண்டும் உதவிக் கலெக்டரும் சம்பவங்கள் நடந்த இடங்களுக்கு விரைந்து வந்தனர்.

உதவிக் கலெக்டர் ஆஷ் தனது கைத்துப்பாக்கியினால் கூட்டத்தை நோக்கிச் சுட்டான். 17 வயதுச் சிறுவன் ஒருவனும் மற்றும் மூன்று இளைஞர்களும் குண்டுகளுக்குப் பலியானார்கள். ஆஷ் சுட்டுப் பலியான மனிதர்களை மக்கள் தூக்கிச் சென்றுவிட்டார்கள். மக்கள் வெள்ளையதிகாரிகளைக் குறிவைத்துக் கல்லெறிந்தார்கள். விஞ்சிற்கு மண்டையில் காயம் ஏற்பட்டது. விசேஷ போலீஸ்காரரைக் கலகத்தை அடக்குவதற்காக விஞ்சு அழைத்தான். இதனைத் தொடர்ந்து போலீசார் தச்சநல்லூர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நகரங்களைச் சேர்ந்த பலபேர் மீது வழக்குத் தொடுத்தனர். சிதம்பரம்பிள்ளையும் சிவாவும் கைது செய்யப்பட்ட பின்னர் நடந்த நிகழ்ச்சிகளுக்கும் அவர்களையே பொறுப்பாக்கி வழக்குத் தொடரப்பட்டது.

விசாரணை

சிதம்பரம்பிள்ளை மீது இ.பி.கோ. 123ஏ செக்‌ஷன்படியும் 153ஏ செக்‌ஷன்படியும் குற்றம் சாட்டப்பட்டது. சிவாவிற்குத் தங்க இடம் கொடுத்தது, அவருக்கு ஆதரவளித்தது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன. திருநெல்வேலி அடிஷனல் மாவட்ட மாஜிஸ்டிரேட்டு வாலஸ் வழக்கை விசாரித்தார். அரசாங்கத் தரப்பில் ரகசியப் போலீசார் அறிக்கைகளும் தலைவர்களுடைய பேச்சுக்களின் பகுதிகளும் சாட்சியமாகக் காட்டப்பட்டன. அரசியல் குற்றச்சாட்டுகளை, அரசியல் முறையிலேயே தலைவர்கள் மறுத்தனர். குற்றச்சாட்டுகளை அவர்கள் மறுக்கவில்லை. கைதிக் கூண்டில் நின்று அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் மீது குற்றம் சாட்டினர்.

என். கே. ராமசாமி ஐயர் எதிரிகளுக்காக வாதாடினார். ஸ்ரீநிவாசாச்சாரி, சடகோபாச்சாரி, நரசிம்மாச்சாரி, சீனிவாசன் முதலிய வழக்கறிஞர்கள் சிவாவுக்கும் சிதம்பரம் பிள்ளைக்குமாக வாதாடினார்கள். பாண்டிச்சேரியில் வசித்து வந்த மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியாரும் பாரதியாரும் வழக்கறிஞர்களை அமர்த்தினார்கள். பாரதியார் விசாரணைச் செய்திகளை நாடு முழுவதும் பரப்பினார். வ.உ.சி.யின் அறிக்கைகளை அச்சடித்து நூலாக வெளியிட்டார். தினசரிகளில் செய்தி வெளியிட ஏற்பாடு செய்தார்.

பூர்வாங்க விசாரணை முடித்து, வழக்கு செஷன்ஸ் விசாரணைக்கு அனுப்பப்பட்டது. நூற்றுக்கணக்கான