பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. வானமாமலை

33

சென்றனர். வழியெல்லாம் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் திரண்டது. அவரை அவர்கள் வாழ்த்தி விடை கொடுத்தனர். அவர் எதற்காகச் சிறைத் தண்டனை பெற்றாரோ, அந்நோக்கங்களுக்காகத் தாங்கள் பாடுபடப்போவதாக உறுதியளித்தனர். கோவையில், விஞ்செல் என்ற ஒரு ஜெயிலர் இருந்தான். அவன் நிறத்திமிர் கொண்டு சுதேசிகள் மீது வெறுப்புக் கொண்ட மனிதன். அவன் சிதம்பரம் பிள்ளைக்கும் அவரது சுதேசி நண்பர்களுக்கும் பல தொந்தரவுகளையும் இடையூறுகளையும் விளைவிப்பதிலேயே கண்ணும் கருத்துமாயிருந்தான். சுதேசி இயக்கம் அழிந்து போய்விட்டது, தடியடி கொடுத்தது போன்ற செய்திகளைப் பரப்புவான். பத்திரிகைகள் சிறைவாசிகளுக்குக் கொடுக்கப்படுவதில்லை.

சிவாவின் வழக்கில் தண்டனையடைந்த நண்பர்கள் சேலத்திற்கு மாற்றப்பட்டார்கள். வ. உ. சி. தனிமையாகக் கோவைச் சிறையில் விடப்பட்டார். அவரை ஜெயிலர் செக்கிழுக்க உத்திரவிட்டான். தவறி விழுந்தாலோ, கால் ஓய்ந்து நின்று விட்டாலோ, சவுக்கால் அடிப்பான். அச்செய்தி பிற சிறைவாசிகளுக்குப் பரவியது. சிறைவாசிகளுக்குத் தேவையானவை அன்பான சொல்லும் புன்னகையும்தான். கசப்பு உமிழ்ந்து பேசுகிற அதிகாரிகளின் சொற்களைக் கேட்டு மனம் குன்றிப் போயிருக்கும் சிறைவாசிகளுக்கு ஆதரவான சொல்லும் அன்பான புன்னகையும் அமுதம் போன்றவை. அதோடு அவர்களுடைய அப்பீல் மனுக்களையும் அவர் எழுதிக்கொடுப்பார். எனவே, சிறைவாசிகள் அனைவரும் அவரை நேசித்தார்கள். அவருக்காக எதுவும் செய்யத் தயாராயிருந்தார்கள். ஒரு நாள் அவர்கள் விஞ்செல்லை கழிவோடைக்குள் தள்ளிக் கம்பளியால் மூடி அடித்துவிட்டார்கள். யார் அடித்தார்கள் என்று அவனால் அடையாளம் காணமுடியவில்லை.

கோவைச் சிறையில் இருந்தபோதுதான் ஆஷ் கொலை செய்யப்பட்ட செய்தி வந்தது. ஆஷ் மூன்று இந்திய இளைஞர்களைக் கொன்றுவிட்டான் என்ற செய்தியறிந்ததும் வாஞ்சிநாதன் என்ற இளைஞன் அவனைக் கொல்லுவேன் என்று சபதம் செய்து கொண்டான். தேச விடுதலைக்காக வன்முறையைப் பயன்படுத்துவது தவறில்லை என்ற கருத்துக்கொண்ட இளைஞர் அணியில் சேர்ந்து பயிற்சி பெற்றான். ஒரு கைத்துப்பாக்கியையும் அவர்களிடமிருந்து அவன் பெற்றிருந்தான், விஞ்சிற்குப் பிறகு ஆஷ் கலெக்டரானான். இவன் எங்கோ செல்வதற்காகத் தன் மனைவியோடு ரயிலேறிச்

34/3