பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வ.வே.சு. ஐயரிடம் தோற்றது ஸ்காட்லாண்ட் யார்டு போலீஸ்!

சூரியன் மறையாத பிரிட்டிஷ் பேரரசில் இந்தியாவின் அரசப் பிரதிநிதியாக இருந்தவர் லார்டு கர்ஸான் அவர் ஆங்கிலேய ஆட்சியின் ஆதிக்க வெறியர். அதிகார அகம்பாவத்தில், ஆணவ தந்திரத்தில் வல்லவராக விளங்கியவர் அவர் ஆணவத்திற்குக் காரணம், சூரியன் உள்ளளவும், கடல் நீர் இருக்குமளவும் பிரிட்டிஷ் பேரரசே இந்தியாவை ஆட்சி செய்ய வேண்டும் என்ற எண்ணமாகும்.

கர்லான் பிரபு காலத்தில், இந்தியாவில் இந்திய தேசிய காங்கிரஸ் மகா சபையின் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்து கொண்டிருந்தது. எப்படியும் போராட்டத்தை அழித்தே தீருவது என்ற முடிவிலே அவர் பணியாற்றிக் கொண்டிருந்தார்!

இந்தியாவுக்கு சுதந்திரம் தேவை என்று மிகத் தீவிரமாகப் போராட்டம் நடத்திய மாநிலங்களிலே ஒன்று தமிழ் நாடு, மற்றொன்று வங்காளமாகும்.

தமிழ் நாட்டிலே கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார், திரு.வி.கலியான சுந்தர முதலியார், சத்திய மூர்த்தி ஐயர், சேலம் விசயராகவாச் சாரியார், வ.வே.சு. ஐயர், கு. காமராஜ் போன்ற எண்ணற்றவர்கள் விடுதலைப் போராட்டத்திலே பங்கேற்று தங்களது உடல், பொருள், உயிர் அனைத்தையும் சுதந்திர தேவிக்காகப் பலிகொடுக்க உழைத்த மாவீரர்கள் ஆவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/12&oldid=1080558" இலிருந்து மீள்விக்கப்பட்டது