பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

19


படித்தார். பிறகு, கவரைத் தம்மிடம் நீட்டிய போலீசைப் பார்த்து. "நீங்கள் யாருக்கோ எழுதப்பட்டுள்ள கவரை என்னிடம் காட்டித். தருகிறீர்கள். உள்ளே சென்று விசாரித்துப் பாருங்கள்! நான் வருகிறேன்” என்று கூறிக் கொண்டே மெதுவாக அவ்விடத்தை விட்டு வெளியே சென்றார்!

அந்தத் தாடிக்காரருடைய பேச்சில் அச்சமோ, பயமோ, திணறலோ, பதற்றமோ, பரபரப்போ, முகக்களை இழப்போ, அல்லது மாறுதலோ கொஞ்சமும் இல்லை. அவர் பேசும் போது தெளிவாகவும், நறுக்குத் தெறித்தாற் போலவும். அருமையான அழகான ஆங்கில மொழியிலே பேசியதைக் கண்ட அந்தப் போலீஸ் அதிகாரி மெய் மறந்து நின்றார்!

பின்னர் தாடிக்காரர் கையிலிருந்த பெட்டியின் மேல் பாகத்தில் வி.வி.எஸ். என்று எழுதப் பட்டிருந்ததைக் காட்டி, கவர்மீது எழுதப்பட்டிருக்கும் பெயருக்கு உரியவர் இல்லை என்கிறீர்கள். உங்களுகடைய பெட்டி மீதும் இதே பெயர் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளதே. இதன் பொருள் என்ன? என்று எதிர்பாராத ஒரு கேள்வியைக் கேட்டு விட்டார்.

தாடிக்காரர், தடுமாறாமல், “என் பெயர் வி. விக்ரம் சிங் அதையே சுருக்கி நான் வி.வி.எஸ். என்று எழுதியிருக்கிறேன். உங்களுக்கு மேலும் ஏதாவது சந்தேகமிருந்தால், என் பெட்டியைத் திறந்து பார்த்துக் கொள்ளுங்கள்.” என்று கூறிக் கொண்டே தனது கையிலே இருந்த பெட்டியை மாறு வேடத்திலிருந்த போலீஸ் அதிகாரியிடம் கொடுத்தார்.

ஒரு போலீஸ்காரரின் கேள்விக்கு எந்த விதத் தடுமாற்றமும் இல்லாமல், பதில் டக்டக்கென்று நறுக்குத் தெறித்தாற் போலத் தயக்கமேதும் இல்லாமல் வந்ததால், தாம் தேடி வந்த வி.வி.எஸ். என்பவர் தாடிக்காரர் அல்லர் என்பதை முடிவு செய்து கொண்டு, அவரிடம் ‘சாரி, என்று கூறிவிட்டு போகுமாறு விடை கொடுத்தார் அந்த அதிகாரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/21&oldid=1080722" இலிருந்து மீள்விக்கப்பட்டது