பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஊழிற் பெருவலி யாஉள

யார் எங்கே சென்றால் என்ன? அவனுக்கு முன்னே அங்கே சென்ற காத்திருந்து, அவன் வருகையை எதிர்நோக்கிக் காத்திருப்பதற்கு பெயர்தான் ஊழ்!

அதனால் திருவள்ளுவர் பெருமான் ஊழிற் பெருவலி யாவுள? என்ற கேள்வியைக் கேட்டு அதற்குப் பதிலாக, மற்று ஒன்று சூழினும் தான்முந்துறும் என்றார். அவ்வாறு காத்திருப்பதுதான் அவனது ஊழ் எனவே, அது வலிமை வாய்ந்தது.

அந்த ஊழ் மன்னாதிமன்னர்களையும், மாவீரர்களையும், அறிவுலக வித்தகர்களையும் அவர்களது சாதனை ஆற்றல்களையும் இருந்த இடம் தெரியாமல் தவிடு பொடியாக்கி மறைந்து போகும்படி செய்துள்ளதை நாம் வரலாற்றிலும், புராண இதிகாசங்களிலும், சமுதாயச் சம்பவங்களிலும் படித்திருக்கின்றோம் ஊழ் அத்தகைய பெருவலிமை பெற்றதாகும்.

அந்த ஊழ், நமது வ.வே.சு. ஐயரது வாழ்விலும் விளையாடத் துவங்கியதன் காரணம்தான், அவரது ரங்கூன் வாழ்க்கையும், லண்டன் பயணமும், பாரிஸ்டர் பட்டம் பெற நினைத்த எண்ணமும் ஆகும்.

வ.வே.சு.ஐயர், தீரமுள்ளவர்தான், ஈரமுள்ள குணங்களைக் கொண்ட குடும்பஸ்தர்தான்; பிறருக்கு மனத்தாலும் எவ்வித தீமைகளையும் நினைக்காதவர்தான். ரங்கூன் புறப்படும் வரை யாருக்கும் எந்தத் தீங்கும் நெஞ்சிலே நினைக்காமல், தானுண்டு தனது கல்வி வளர்ச்சியுண்டு, குடும்பம் உண்டு, குடும்ப ஒழுக்கமுண்டு என்றளவில் வாழ்ந்த ஓர் ஒழுக்க சீலர்தான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/38&oldid=1082602" இலிருந்து மீள்விக்கப்பட்டது