பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

71


நெருப்பு மீது படர்ந்த சாம்பலைப் போல உதிர்ந்து சிதறிக் கொண்டே இருந்தன. ஆனாலும், தான் சுற்றியலைந்த நாடுகளிலே பட்ட அனுபவத் துன்பங்கள், சோக இடையூறுகள், இடையறாது ஏற்பட்ட இன்னல்கள் சோதனைகள் எதுவும் அவரது நாட்டுப் பற்றையோ, விடுதலை உணர்ச்சிகளையோ எள்மூக்களவும் மாற்றவில்லை. இது வன்றோ ஓர் இலட்சிய வீரத் திருமகனின் வித்தக இயல்பு என்பதையே வ.சே.சு.ஐயர் நிரூபித்தபடி வாழ்ந்தார்.

கொழும்பு மாநகரிலே இருந்து தமிழ் நாட்டின் ஒரு பகுதியான, பிரெஞ்சு ஆட்சியிலே உள்ள புதுச்சேரி நகருக்கு வந்து சேர்ந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் பேசும் மக்களைப் பார்த்த மகிழ்ச்சியிலே ஐயர் பெரு மூச்சை விட்டார். தனது வேட உடைகளை எல்லாம் களைந்தார்! தமிழ் உடைகளை அணிந்த தமிழ்ப் பெருமகனாக, அச்சம் ஏதுமற்றுப் பழைய வ.வே.சு.ஐயராக மாறினார்!

ஐயர், புதுச்சேரி நகர் வந்து சேர்ததும் அவர் செய்த வீரச்செயல் என்ன தெரியுமா? லண்டன் மாநகரிலே உள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்காட்லாண்ட் பார்டு என்ற ரகசியப் போலீஸ் துறையின் பெரிய அதிகாரிக்கு ஒரு தந்தி கொடுத்தார். அந்தத் தந்தியில் அவர் "நான் பிரெஞ்சு ஆட்சியிலே உள்ள புதுச்சேரி நகருக்கு மிக ஜாக்கிரதையுடன் வந்து சேர்ந்து விட்டேன்." என்று குறிப்பிட்டிருந்தார்.

தந்தியிலே இருந்த இந்த வாசகங்களைக் கண்ட ஸ்காட்லாண்ட் யார்டு போலீசும், பிரிட்டிஷ் அரசும் வ.வே.சு.ஐயர் மீது கடுங் கோபம் கொண்டன. ஏனென்றால், ஏறக்குறைய ஆறு மாதங்களாக போலீசையும், ஆட்சியையும் ஏமாற்றிவிட்டு மிகச் சுலபமாக இந்தியா போய் சேர்ந்துவிட்டானே என்று அதிர்ச்சி அடைந்தன லண்டன் போலீசும், பிரிட்டன் ஆட்சியும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/73&oldid=1083784" இலிருந்து மீள்விக்கப்பட்டது