பக்கம்:ஶ்ரீ மஹாபாரதம் - பீஷ்ம பர்வம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஸ்ரீ மஹாபாரதம்

னார்கள். குந்தீபுத்திரரான யுதிஷ்டிரர் [1]ஸமந்தபஞ்சகத்துக்கு வெளியில் சேனைகள் தங்குமிடங்களை ஆயிரமாயிரமாக முறைப்படி ஏற்படுத்தினார். பூமிமுழுவதும், தேர்களும் யானைகளும் குதிரைகளும் காலாட்களும் வெளியில் செல்ல, பாலர்களும் விருத்தர்களும் மிச்சமாயிருத்தலால் ஒருவரும் இல்லாதது போலாயிற்று. அரசரில் சிறந்தவரே! ஸூர்யன் ஜம்பூத்வீபமண்டலத்தில் எவ்வளவுவரையில் பிரகாசிக்கின்றானோ அவ்வளவுவரையிலுள்ள சேனைகளெல்லாம் வந்தன. அந்தஎல்லாவர்ணத்தாரும் ஓரிடத்தில் நிலைபெற்றவர்களாகி அனேகயோஜனை தூரமுள்ள ராஜ்யத்தையும் தேசங்களையும் நதிகளையும் மலைகளையும் காடுகளையும் நான்குபக்கங்களிலும் சூழ்ந்தார்கள். புருஷசிரேஷ்டரே! யுதிஷ்டிரர் வாகனங்களையுடைய அவர்களுக்கெல்லாம் சிறந்த பக்ஷணங்களையும் போஜனங்களையும் கொடுக்கும்படி கட்டளையிட்டனர். ஐயா! யுதிஷ்டிரர், 'இப்படி சொல்லும் இவன், பாண்டவர்களைச் சேர்ந்தவனென நிச்சயமாக அறியத்தக்கவன்' என்று அவர்களுக்குப் பலவிதமான அடையாளங்களை ஏற்படுத்தினார். குருவம்சத்திற் பிறந்த யுதிஷ்டிரர் யுத்தஸமயம் நெருங்கியிருக்கும்பொழுது எல்லோருக்கும் அடையாளங்களையும் பெயர்களையும் ஆபரணங்களையும் சேர்ப்பித்தார். கம்பீரமான மனமுள்ள துர்யோதனன் பார்த்தனுடைய கொடி நுனியைக் கண்டு எல்லா அரசர்களுடனும் சேர்ந்து பாண்டவருக்கு எதிரணிவகுத்தான். தம்பியர்களால் நாற்புறத்திலும் சூழப்பட்டு ஆயிரம் யானைகளுடைய மத்தியில் தலையின் மீது தூக்கிப்பிடிக்கப்படுகிற வெண் குடையுடன் விளங்கும் துர்யோதனனைக்கண்டு போரில் மகிழ்ச்சியடைகிறவர்களான பாஞ்சாலர்கள் ஸந்தோஷமும் விருப்பமுமுள்ளவர்களாகிப் பெரிய சங்கங்களை ஊதினார்கள். ஆயிரமாயிரமாகப் பேரிகைகளையும் அடித்தார்கள். பிறகு பாண்டவர்கள் தம்சேனை, மிக்க ஸந்தோஷத்துடனிருப்பதைக்கண்டு மனக்களிப்புற்றார்கள். வீர்யமுடையவரான வாஸுதேவரும் ஸந்தோஷமடைந்தார். புருஷோத்தமர்களான வாஸுதேவரும் தனஞ்சயனும் தேரிலிருந்துகொண்டு தங்களைச் சேர்ந்த போர்வீரர்கள் மகிழும்படி சிறந்த சங்கங்களை ஊதினார்கள். பாஞ்சஜன்யம் தேவ தத்தமென்கிற இரண்டு சங்கங்களுடைய சப்தத்தையும் கேட்டு யுத்தவீரர்கள் மலஜலங்களைப் பெருக்கினார்கள். கர்ஜிக்கின்ற ஸிம்மத்தினுடைய முழக்கத்தைக்கேட்டு மற்ற மிருகங்கள் பயமடைவது போல அந்தச் சேனையானது (சங்கங்களின்) ஒலியைக் கேட்டு வாட்டமுற்-


  1. மூலத்தில், ‘ஸ்யமந்தபஞ்சகம்’ என்றிருக்கிறது.