பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர்களுக்கு சன்மார்க்கக் கல்வியும், நல்லொழுக்கமும் பயிற்றுவிக்கச் செய்தார். - தமக்குச் சொந்தமான இடத்தில் தொடக்கப் பாடசாலைக்கென உறுதி வாய்ந்த கட்டிடம் கட்டிக் கொடுத்து, ஹாமீம்புரம் பகுதியைச் சேர்ந்த சிறார்களுக்கு எண்ணும் எழுத்தும் கற்பிக்கச் செய்த கல்வியின் தொண்டர்; பொதுமக்கள் அன்றாடம் புழங்குமிடங்களிலும் அவசியத்தினிமித்தம் அவர்கள் கூடுமிடங்களிலும் நன்னீர் நிலையங்களையும், தண்ணீர்ப் பந்தல்களையும் நிறுவி, அவற்றின் பராமரிப்பிற்காகுமான செலவினங்களையும் தாமே ஏற்றுக் கொண்ட ஈர நெஞ்சினர்; வாயில்லா உயிர்ப் பிராணிகளும் அவைகளது தாக வேட்கையை தணிவித்துக் கொள்ளும் பொருட்டு நீர் நிலைகளும், தண்ணீர்த் தொட்டிகளும் அமைத்துத் தந்த அருள் உள்ளம் கொண்டவர்; அன்ன சத்திரம் கட்டி வைத்து, வழிப்போக்கர்கள், திக்கற்றவர்களுக்கு அன்றாடமும் அன்னதானம் அளித்து வந்த பசிப்பிணி மருத்துவர்; ஏழைகளுக்கு உற்ற வேளை கண்டு உதவி செய்வதை கடமையாகக் கொண்ட ஏழைப்பங்காளர்; ஹாமீம்புரம் குடியிருப்பில் தீக்கிரையாகிப் போன சில வீடுகளை, கல்லுங் காரையோடுடனும் கூடிய திடமான கட்டிடங்களாய்க் கட்டிக் கொடுத்த காருண்யர்; - திருமணம் முடிக்க வழியில்லாத எண்ணற்ற ஏழை, எளிய பெண்களுக்கு நல்லாதரவுடன் பொன்னும் பொருளும் கொடுத்து சிறப்புறத் திருமணம் செய்வித்து நல்வாழ்வு பெறச் செய்த பொன்மனம் கொண்ட புண்ணியர்; தமது வாணிப நிலையங்களில் நூற்றுக்கணக்கானோரை பணிகளில் அமர்த்தி, அவர்களது குடும்பங்களின் வறுமையைப் போக்கிய கருணையாளர்; - தமது சுற்றம் கிளையாரெல்லாம் செழிப்புடன் வாழ்ந்திடச் செய்ய அவர்களுள் பலரைத் தமது வாணிப நிலையங்களில் பங்குதாரர்களாக இணைத்தும், மற்றும் பலருக்கு வணிக நிறுவனங்கள் அமைத்தும் கொடுத்த பெருந்தகையாளர்; * பள்ளிவாசலில் தங்கிச் செல்லும் ஏழை பயணிகளுக்குத் தினமும் உணவளிக்கச் செய்து வந்த கருணாகரர்; iO