அறிஞர் அண்ணாதுரை
11
அண்ணன் அறியாவண்ணம் தன்னலத்துக்காக நடந்து கொள்வது என்றாகிவிட்டால், குடும்பக் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த எத்தனைவிதமான பந்தம் பாசம் பேசியும், பழைய கதைகளைச் சொல்லியும், இராமனையும் இலட்சுமணனையும் துணைக்கு அழைத்தும் முடியாததாகிவிடும்—குடும்பம் பிளவுறும் பிரியும் அண்ணன் தம்பிக்குள்ளாக, ஒரு குடும்பத்திலேயே இது நிலை என்றால், ஒரு ஸ்தாபனத்தில், தலைவருக்கும் துணைத்தலைவருக்கும். அல்லது தலைவருக்கும் ஸ்தாபனத்தில் மற்ற முக்கிய உறுப்பினர்களுக்குமிடையே கடைசிவரையில், பாசம் ஒன்றை மட்டும் கொண்டு, அன்பு உண்டாக்கி ஸ்தாபனத்தை உடையா தபடி பார்த்துக்கொள்ள முடியாது. அமைப்புகளின் ஒற்றுமை, அதனைச் சார்ந்தவர் அனைவரும், ஒரே நோக்கம் கொண்டு ஒரேவகையான குறிப்பிட்ட கொள்கைக்காகப் பாடுபடுபவர், என்பதைத்தான் பொறுத்து இருக்கிறது. இந்த ஒற்றுமையும் போலியானதாக இருக்கக்கூடாது, இருப்பின் மிகமிகச் சாதாரண சங்கடமும் ஸ்தாபனத்துக்குப் பெரியதோர் இடையூறாகிவிடும்.
ஸ்தாபனம் ஏற்படச்செய்வதற்குக் கொள்கைகள் தேவை என்பது, கட்டடம் கட்டுவதற்கு அதற்குரிய சாமான்கள் தேவை என்பது போன்றது. கட்டடம் அமைக்கும் கடினமான காரியத்திற்கு அதற்கான திறமைவாய்ந்த கட்டட வேலைக்காரர் தேவைப்படுவதுபோல, சில குறிப்பிட்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஸ்தாபனத்தை அமைக்க, திறனும் உறுதியும் கொண்ட அமைப்பாளர் தேவை. அந்த அமைப்பாளருக்கு, தாம் எந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொள்வது என்று கண்டறியும் திறனும், கட்டடக் கட்டுக்கோப்புமுறையிலே ஸ்தாபனம் இருக்கவேண்டும் என்ற நோக்கமும் நிச்சயமாகத் தேவை.