பக்கம்:ஸ்தாபன ஐக்கியம்.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஸ்தாபன ஐக்கியம்



உலக அரங்கில், மிக முக்கியமானதாகவும், பலருடைய மனதை மருட்டக்கூடியதாகவும், தொழிலாளர் பிரச்னை வளர்ந்துவிட்டது. நீதியையும் நேர்மையையும், சமுதாயத்தில் அமைதியையும் சுபீட்சத்தையும் விரும்பும் எவரும் தொழிலாளர் பிரச்னையை அலட்சியப்படுத்தி விடவோ, அல்லது அடக்குமுறைகளால் அழித்துவிடக் கூடுமென்றோ எண்ணமுடியாது. பிரச்னை நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டும், புதுப்புது உருவங்களைக் காட்டிக்கொண்டும் இருக்குமே ஒழிய தானாக மங்கி விடவும் செய்யாது, தாக்குதலால் தகர்ந்தும் போய்விடாது. பொது அறிவும், ஜனநாயக உணர்ச்சியும் வளர வளர பிரச்னை பலம் பெற்றுக்கொண்டுதான் வரும். எனவே, தொழிலாளர் ஸ்தாபனத்தைப்பற்றிச் சிந்திக்கவேண்டியது, பொறுப்புள்ள யாருக்கும் அவசியமானதாகிவிட்டது. ஸ்தாபன ரீதியாகப் பிரச்னைகளைக் கவனித்து, முடிவு செய்யும் எண்ணமும் ஏற்பாடும், இப்போது எங்கும் பரவிவிட்டது. எந்த ஸ்தாபனமும் ஐக்கியத்தை, ஒற்றுமையைக் கொண்டதாக இருந்தால் மட்டுமே, வலியுடன் விளங்கும், பயன் விளையும். ஆகவே ஸ்தாபன ஐக்கியத்தைக் கவனித்தாகவேண்டும்.

ஸ்தாபனம்—அதாவது அமைப்பு—பலருடைய எண்ணங்களைத் திரட்டி, பலருடைய சக்திகளை ஒருங்கு சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் ஓர் பொது இடம்,—ஓர் பாசறை. பாசறையிலே, பலவிதமான போர்க்கருவி-