பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

ஹிராடெடஸின்


நிகழாத நாடு தமிழ்நாடு ஆனால், மேற்குறிப்பிட்ட இயற்கைச் சீற்றங்கள் கிரேக்கம், சீனா, எகிப்து நாடுகளை அடிக்கடி சீரழித்து நிலைகுலைய வைத்து, பூகோள அமைப்பையே உருக்குலைத்தன. இது போன்ற ஆபத்தும் - அபாயமும் இன்றுவரை தமிழ் நாட்டுக்குள் கிடையாததும் ஒரு முக்கியச் சிறப்பாகும்.

எகிப்து நாட்டில் பாயும் நைல் நதி, மெசபடோமிய மண்ணில் பாய்ந்தோடிடும் டைக்ரிஸ், யூப்ரடிஸ் நதிகள், சீன நாட்டில் ஓடும் மஞ்சள் நதி ஆகியவற்றின் நீர்ப்பெருக்கும், வெள்ளச் சீற்றங்களும் அடிக்கடி தோன்றி அந்தந்தப் பகுதிகளின் நாகரிகங்களை நாசமாக்கிவிட்டன. அதனால், நைல்நதி நாகரிகம், பாபிலோனிய நாகரிகம், அஸ்ஸிரிய நாகரிகம், மஞ்சள் நதியின் சீன நாகரிகம் எல்லாமே நிலைபெறாமல் போய்விட்டன.

அதுபோலவே, இந்திய நாட்டின் பிரம்மபுத்ரா நதி, சிந்து நதி, கங்கை நதிகளின் வெள்ளப் பெருக்குச் சீற்றங்களும் அப்பகுதியில் வளர்ந்த வட ஆரிய நாகரிகத்தை வளர விடாமல் தடுத்துச் சீரழித்து விட்டன. ஆனால், தமிழ்நாடு அப்படிப்பட்ட நிலையிலே இருந்து தப்பித்துவிட்டது.

தமிழ் நாட்டிலுள்ள காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளின் நீர்ப் பெருக்காலும், வெள்ளச் சீற்றங்களாலும் எந்தவித ஆபத்தோ அழிவோ தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டதில்லை. கடல் கொந்தளிப்புகளாலும் சேதம் இல்லை. பூகம்ப அபாயங்களால் பாதிப்புக்கள் இல்லை. ஏனென்றால் தமிழ் நாடு ஒரு பீடபூமி அமைப்புடைய இயற்கையான நாடு. அதனால் இயற்கையான ஆபத்துகளற்ற நாடு.

இத்தகைய ஓர் இயற்கை அமைப்புக்கள் சூழ்ந்த தமிழ் நாட்டில் தோன்றிய தமிழர்நாகரிகம், பண்பாடு, பழக்க வழக்கங்களை இங்குள்ள மக்கள் காப்பாற்றிப் பாதுகாத்து வந்தார்கள்.

எனவே, கிரேக்க நாகரிகம், எகிப்திய நாகரிகம், தமிழ் நாகரிகம், ஆரிய நாகரிகம் போன்ற உலக நாகரிகங்களுள் இன்று பல