பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

31



“இயேசு பெருமான் தோன்றுவதற்கு முன்பே, கி.மு. நான்காம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வெளியே உள்ள நாடுகளில் இந்தியப் பண்பாடு அறிமுகமாகி வளர்ந்திருந்தது.” என்கிறார்.

எனவே, கி.மு. 16 ஆம் நூற்றாண்டளவில், பினீசியர்களின் முக்கியத் துறைமுகம் தீரே என்பதும், பினீசிய நாடு வலிமை பெற்ற நாடாக இருந்தது என்றும், எகிப்தியர்களால் அந்த நாடு பிடிக்கப்பட்டது என்றும், கி.மு. 6ஆம் நூற்றாண்டு வாக்கில் அந்த நாடு தமிழ் நாட்டுத் துறைமுகங்களுடன் வியாபாரம் நடத்தியது என்றும், பழைய பைபிள் நூலில் இந்தக் குறிப்புக்கள் பல இடங்களில் இடம் பெற்றுள்ளன என்றும், அதே நேரத்தில் அஸ்ஸீரிய நாட்டின் கல்வெட்டுக்களிலும் பொறிக்கப்பட்டிருக்கிறது என்பது போன்ற பல செய்திகள் நமக்குத் தெரிகின்றன.

Alexander, the great என்று கூறப்படும் மகா அலெக்சாந்தர் அரசாண்ட கி.மு. 356 - 323 ஆம் ஆண்டுகளில் பினீசியா அலெக்சாண்டர் ஆட்சியுடன் இணைக்கப்பட்டது. அதற்குப் பிறகு, கி.மு. 197 ஆம் ஆண்டில் அரசாண்ட செலூசிட் அரசுடன் அது மீண்டும் இணைக்கப்பட்டது. அதற்குப் பிறகு கி.மு. 64 ஆம் ஆண்டில் அரசாண்ட பாம்பே என்பவரால் ரோமானியப் பேரரசுடன் சேர்க்கப் பட்டுவிட்டது.

இவ்விதமான இணைப்புக்களுக்குப் பிறகு, ரோமப் பேரரசுக்கு அது வரிகட்டி வாணிகம் செய்து வந்தது. பாம்பே என்ற அந்த அரசன் இறந்த பின்பு அதாவது கி.மு. 48 ஆம் ஆண்டில் பினீசியா என்ற நாடே மறைந்து விட்டதால் அதன் பெயரும் அழிந்து போய், அந்த செம்மையான மொழியும் அழிந்து விட்டது. இதற்கெல்லாம் என்ன காரணம்?

பீனிசியாவில் அடிக்கடி நடந்து வந்த அரசுப் போர்களும், அதனால் அந்நாடு தனது பிறப்புரிமையான சுதந்திரத்தை இழந்ததுமே ஆகும்.