பக்கம்:ஹிராடெடஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

57



அதே குரோசஸ் மன்னனுக்கு, இரண்டாவது மகன் ஒருவன் இருந்தான். அவன் ஊமை! வாய் பேசாதவன்! அக்குறை ஒன்றே ஒன்றைத் தவிர மற்ற எல்லா மனிதநேய இலக்கணங்களும் உடைய அழகன்! அந்த ஊமை மகன் வளர்ந்து வாலிப நிலை வந்தபோது பாவம்- மன்னன் குரோசஸ், தனது இறுதிக் காலத்தில் சிறையில் வாழும் பரிதாப நிலையில் தாழ்ந்து விட்டார்.

பாரசீகப் போர் வீரன் ஒருவன் வாளேந்திக் கொண்டு போரில் தோல்வி கண்டதால் குரோசசை வெட்டுவதற்குக் கோபாவேசமாக ஓடிவந்தான். அவன் அடக்க முடியா வெறி வேகத்தோடு வருவதைக் கண்ட குரோசஸ், எல்லாத் தடுப்புக் கலைகளும் நன்கு தெரிந்தும் கூட; தடுக்காமல் ஊமைபோல தளர்ந்து நின்று கொண்டிருந்தார். ஏன் அவ்வாறு இருந்து விட்டார் அவர்? மோசமான வாழ்க்கைப் பூகம்பத்தின் பிளவுக்குப் பலியான பிறகு, இனி வாழ்ந்தால் என்ன? செத்தால் என்ன? என்ற முடிவுக்கு அவர் வந்த பிறகு நாம் ஏன் வெட்ட வருபவனின் வாளைத் தடுக்க வேண்டும்? என்பதன் விரக்தியிலே அவர் வீழ்ந்துவிட்டார்!

இந்தப் பயங்கரக் காட்சியை, குரோசஸ் ஊமை மகன் பார்த்து விட்டான். அவன் உடல் நடு நடுங்கியது; கண்கள் படபடத்தன; நெஞ்சிலே நெருப்ப பற்றி, தனது உடலையே எரிப்பது போன்ற மோசமான கனல் சூட்டால் தவித்தான்; துடித்தான்; படபடத்தான்; “ஐயோ, ஐயோ குரோசசைக் கொன்று விடாதே, கொன்று விடாதே” என்று ஊமை கத்தினான்; அலறினான்; பதறினான்; கண்ணீர் வடித்தான் கதறினான்!

“ஐயா; குரோசசைக் கொன்று விடாதே” என்று, ஊமை வாய்திறந்து முதன் முதலில் பேசிய கூப்பாட்டுக் கூச்சலைக்கேட்டு அங்கே கூடி இருந்தோர் ஆச்சர்யப்பட்டார்கள்! அன்று முதல் ஊமை தனது இறுதிக் காலம் வரை நன்றாகப் பேசினான்!