பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2. மன்னன் யூரிஸ்தியஸின் கட்டளை

ஹெர்க்குலிஸூக்கு வயது பதினேழாயிற்று. அவன் கிரானுடைய பள்ளியை விட்டு வெளியேறித் தனியாக வாழத் தொடங்கினான். மக்களைத் தொந்தரவு செய்து வந்த விலங்குகளை வதைப்பதும் வலியோர் மெலிந்தவரை வருத்தாமல் காப்பதும் அவனுக்குத் தொழில்களாயின. இவற்றால் மக்களிடையே அவனுடைய புகழ் வளர்ந்து வந்தது.


ஆனால், அந்தச் சமயத்தில் அவன் வேறு ஒருவனுக்கு அடிமை போலிருந்து சில ஆண்டுகள் பணியாற்ற நேர்ந்தது. அவன், பூமியில் தோன்றியதிலிருந்தே தேவர்களின் அரசியான ஹீரா தேவி அவனுக்கு எதிரியாக இருந்து வந்தாள் என்பது முன்னரே கூறப்பட்டுள்ளது. அவளைச் சமாதானப்படுத்துவதற்காகச் சீயஸ் கடவுள் ஒரு நிபந்தனை விதித்திருந்தார். அதாவது, ஹெர்க்குலிஸ் தக்க வயது வந்ததும், மைசின் நகரத்து மன்னனான யூரிஸ்தியஸிடம் கட்டுப்பட்டுச் சிறிது காலம் அவன் ஏவிய பத்துப் பணிகளைச் செய்து முடிக்க வேண்டுமென்றும், அதற்குப் பின்னால் அவன் ஒலிம்பிய மலைக்கு வந்து ஒரு தேவனாக வசிக்க வேண்டுமென்றும் அவர் கூறியிருந்தார். அவர் குறித்திருந்த காலம் வந்துவிட்டது. யூரிஸ்தியஸ் ஹெர்க்குலியசின் சிற்றன்னையின் மைந்தன். அவனுக்கு ஹெர்க்குலிஸிடம் அச்சமும் பொறாமையும் அதிகம். ஆகவே, காலம் விட்டது என்பதை அறிந்து, அவன் ஹெர்க்குவிஸுக்குத் தூதர்களை அனுப்பிக் தன்னிடம் வந்து பணிபுரிய வேண்டுமென்று அவனை அழைத்தான். முதலில் ஹெர்க்குலிஸ் மறுத்துவிட்ட போதிலும், பிறகு, சீயஸ் கடவுளின் கட்டளை என்பதால், அவன் மைசீன் நகருக்குச் சென்று யூரிஸ்தியஸைக் கண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/11&oldid=1033567" இலிருந்து மீள்விக்கப்பட்டது