பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

ஹெர்க்குலிஸ்

தலையில் மகுடம் அணிந்து அரசனாக விளங்கிய போதிலும், ஆலன் தன் கோழைத்தனத்தால் அடிமையைவிடக் கேவலமான நிலையை அடைந்தான். ஹெர்க்குலிஸ், தேவ கட்டளையால் அவனுக்குத் தொண்டு செய்ய நேர்ந்திருப்பினும், தன் வீரத்தாலும் பெருந்தன்மையாலும் அரண்மனையிலும், வெளியிலும், நாட்டிலுமே புகழ் பெற்று அரசனுக்கும மேலான பெருமையுடன் விளங்கினான்.


எவராலும் வதைக்க முடியாத சீயத்தை இரு கைகளாலேயே வதைத்துத் துாக்கி வந்த மானுட மடங்கலாகிய ஹெர்க்குலிஸுக்கு யூரிஸ்தியஸ் எப்படி நன்றி செலுத்தினான்? ‘இனிமேல் ஹெர்க்குலிஸ் கோட்டைக்கு வெளியே சென்றுவிட்டுத் திரும்ப வருகையில், அவனைக் கோட்டைக்குள்ளே வர அனுமதிக்க வேண்டாம்!’ என்று அவன் தன் காவலருக்குக் கட்டளையிட்டான்! நினைவிலும் கனவிலும் அவனுக்கு ஹெர்க்குலிஸைப்பற்றியே திகிலாயிருந்தது. அந்த வீரன் கோட்டைக்குள் வந்தாலே தனக்கு என்ன நேருமோ என்று அவன் கதிகலங்க வேண்டியிருந்தது. எக்காரணத்தாலாவது ஹெர்க்குலிஸ் நகருக்குள் புகுந்து கொலு மண்டபத்திற்கு வந்துவிட்டால், தான் ஓடி ஒளிந்து கொள்வதற்காக அவன் பூமிக்குள் பித்தளைத் தகடுகள் பதித்த ஓர் அறையை அமைக்கும்படியும் ஏற்பாடு செய்துகொண்டான். மண்டபத்திலிருந்து அந்தப் பித்தளை அறைக்குச் செல்ல ஒரு சுரங்க வழியும் அமைக்கப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/22&oldid=1074302" இலிருந்து மீள்விக்கப்பட்டது