பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

ஹெர்க்குலிஸ்

என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. நிலத்தின்மீது நீண்ட குன்று கிடப்பது போல், மடுவிலே கிடக்கும் அந்த நாகத்தைத்தான் ஹெர்க்குலிஸ் வதைக்க வேண்டியிருந்தது.


லெர்னாவுக்குப் புறப்படுவதற்கு முன்னால் ஹெர்க்குலிஸ் தான் நிறைவேற்ற வேண்டிய இந்த இரண்டாவது பணியைப்பற்றி நெடுநேரம் ஆலோசனை செய்தான். தன்னோடு தன் சகோதரன் பையனான அயோலஸ் என்பவனையும் அழைத்துச் செல்லுவது நலமென்று அவன் தீர்மானித்தான். அயோலஸ் இளைஞன் : வீரமுள்ளவன் : கடமை உணர்ச்சியுள்ளவன்; எதிலும் உறுதியாக நிற்கக்கூடியவன். ஆதலால் அவனையும் துணைக்கு அழைத்துக் கொண்டு, ஹெர்க்குலிஸ் ஆர்கோஸ் நகரை நோக்கிப் பயணமானான். இந்தத் தடவை அவன் கையில் உடைவாள் ஒன்றும் இருந்தது.


வழக்கம் போல் ஹீரா தேவி, அவனுக்கு எதிராகவும், நாகத்திற்கு உதவியாகவும் இருந்தாள். ஆனால், அதீனா தேவி அவனுக்குத் தோன்றாத் துணையாயிருந்து உதவி வந்தாள். அவளுடைய உதவியால்தான் அவன் நாகம் இருந்த இடத்தை எளிதில் கண்டு கொள்ள முடிந்தது.


அவனும் அயோலஸும் லெர்னா தோட்டத்தை அடைந்ததும், மடுவிலே நாகத்தைப் பார்த்தனர். ஒன்பது தலைகளும் படம் விரித்து ‘உஸ், உஸ்’ ஸென்று சீறி ஆடிக்கொண்டிருந்தன. ஒன்பது வாய்களும் பெருங்குகைகளைப் போல் திறந்திருந்தன. அவைகளிலிருந்து நச்சுக் காற்று வெளியே வீசிக் கொண்டேயிருந்தது.


நாகத்தைக் கண்தும், ஹெர்க்குலிஸ் மூச்சை அடக்கிச் சுவாசிப்பதை நிறுத்திக் கொண்டு, தன் வில்லில் அனல் உமிழும் அக்னி அஸ்திரங்களைத் தொடுத்து, நாகத்தின் ஒன்பது தலைகளின் மீதும் பாயும்படி விடுத்தான். ஓர் அம்பு கூடக் குறி தவறவில்லை. அவை அத்தலைகளைத் துண்டித்துத் தள்ளிவிட்டன. ஆனால் கீழே விழுந்த ஒவ்வொரு தலைக்கும் பதிலாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஹெர்க்குலிஸ்.pdf/24&oldid=1074303" இலிருந்து மீள்விக்கப்பட்டது